Published : 27 Dec 2024 01:27 PM
Last Updated : 27 Dec 2024 01:27 PM

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு: கார்கே, சோனியா, ராகுல் இறுதி அஞ்சலி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

92 வயதான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வயது முதிர்வு சார்ந்த பிரச்சினைகள் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார். இதையடுத்து அவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

காலை முதல் ஏராளமான தலைவர்கள் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இதபோல், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மன்மோகன் சிங்கின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

மன்மோகன் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், "இது நாட்டிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மிகவும் சோகமான நாள். நாட்டின் சிறந்த அரசியல்வாதிகளில்; நிர்வாகிகளில் டாக்டர் மன்மோகன் சிங் ஒருவர். காங்கிரசை பொறுத்த வரையில், நாங்கள் தலைசிறந்த தலைவர் ஒருவரை இழந்துவிட்டோம். 10 ஆண்டுகள் பிரதமராகவும், 5 ஆண்டுகள் நிதியமைச்சராகவும் இருந்தபோது அவர் ​நல்லாட்சியை வழங்கினார்" என தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி மணிஷ் திவாரி, "சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நானும் அவரும் அண்டை வீட்டாராக இருந்தோம். நான் பிறந்த நாள் முதல் அவருக்கு என்னைத் தெரியும். அவருடைய அரசில் மத்திய அமைச்சராகப் பணியாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. 1991 பொருளாதார தாராளமயமாக்கல் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இந்தியப் பொருளாதாரத்திற்கான கதவுகளைத் திறந்தவர், சிறந்த அறிவுஜீவி, உறுதியானவர். நாம் அனைவரும் அவரிடமிருந்து தொடர்ந்து உத்வேகம் பெறுவோம்.” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி சசி தரூர், “மன்மோகன் சிங்கின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையில் நான் பணியாற்றிய காலத்தில், அவர் தெற்கு ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியதால், அவரை நான் பல ஆண்டுகளாக அறிவேன். அவர் ஒரு அசாதாரண மனிதராக இருந்தார். பின்னர், அவர் பிரதமரானதும், சோனியா காந்தியுடன் இணைந்து என்னை அரசியலுக்கு கொண்டு வந்தார். அவர் நமது நாட்டின் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருந்தார். மன்மோகன் சிங் தலைமையில் உலகளவில் சவாலான காலங்களில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. அவருடைய வழிகாட்டுதலின் கீழ் நம் நாட்டில் எத்தனை நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதை இது காட்டுகிறது. அவரது மனிதாபிமானமும் கருணையும் அசாதாரணமானது. ஒரு பெரிய மனிதர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.” என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, “பழம்பெரும் அரசியல்வாதியும், பொருளாதார வல்லுநரும், இந்தியா கண்டிராத சாதுரியமான மனிதர்களுள் ஒருவருமான டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவுடன் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. அவரது எளிமை, நன்னடத்தைக்கான தேடுதல் மற்றும் பொது வாழ்வில் பொறுப்புக்கூறல் ஆகியவை அனைவராலும் நினைவில் கொள்ளப்படும். எதேச்சதிகார மற்றும் பெரும்பாலும் நியாயமற்ற விமர்சனங்களை எதிர்கொண்டவர் அவர். எனினும், ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக அவர் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டார். விமர்சனங்களை ஏற்க மறுக்கும் இன்றைய சூழலில் அவரது அணுகுமுறை கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

அவர் கூறியது போல், வரலாறு அவரை கனிவாக மதிப்பிடும். டாக்டர் மன்மோகன் சிங் தனது இறுதிப் பயணத்தைத் தொடங்கும் வேளையில், வரலாறு அவரை கனிவாக மதிப்பிடுவதோடு மட்டுமல்லாமல், உண்மையான மண்ணின் மகன் என்பதால் வணக்கம் செலுத்தும்.” என்று கூறியுள்ளார்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பிரமோத் திவாரி தனது இரங்கல் செய்தியில், "மன்மோகன் சிங்கின் மறைவு அரசியலுக்கு அப்பாற்பட்டு பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உலக ஆளுமைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று, மன்மோகன் சிங்கின் தாராளமயமாக்கல் கொள்கையால், கோடிக்கணக்கான குடும்பங்கள் 'உணவு உரிமை' பெறுகின்றன.

MNREGA மூலம், இந்தியாவின் தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களை வேலை வாய்ப்புகள் சென்றடைந்துள்ளன. கொரோனா காலத்தில், இந்த திட்டத்தின் மூலம், கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்ட முடிந்தது. தலைசிறந்த மேதையும், முன்னாள் பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு எனது நன்றியையும், அஞ்சலியையும், மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x