Published : 27 Dec 2024 12:24 PM
Last Updated : 27 Dec 2024 12:24 PM
புதுடெல்லி: 2011ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை குறித்து பிரதமராக இருந்த மன்மோகன் தன்னிடம் பேசியதாக பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் கேமரூன் குறிப்பிட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.
2011ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மாலை 6.54 மணி முதல் 7.06 மணி வரை மும்பையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் மற்றும் தாதர் மேற்கு பகுதிகளில் நடந்த இந்த மூன்று ஒருங்கிணைந்த வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர், 130 பேர் காயமடைந்தனர்.
இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து, இதுபோன்ற மற்றொரு தாக்குதல் நடந்தால், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும் என்று மன்மோகன் சிங் தன்னிடம் கூறியதாக பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2019ல் வெளியிடப்பட்ட அந்த புத்தகத்தில், “பிரதமர் மன்மோகன் சிங்குடன் நான் நன்றாகப் பழகினேன். அவர் ஒரு புனிதமான மனிதர், ஆனால் அவர் இந்தியா எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களில் உறுதியாக இருந்தார். இந்த தாக்குதலுக்குப் பின் வந்தபோது, ஜூலை 2011ல் மும்பையில் நடந்ததுபோன்று மற்றொரு பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும்" என்று என்னிடம் கூறினார் என்று டேவிட் கேமரூன் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் பிரதமராக டேவிட் கேமரூன் கடந்த 2013ம் ஆண்டு பஞ்சாபின் அமிர்தசரஸ் நகருக்கு வந்தார். அப்போது இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்தார். அமிர்தசரசில் பேசிய கேமரூன், 1919ம் ஆண்டு நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலை, பிரிட்டிஷ் வரலாற்றில் மிகவும் வெட்கக்கேடான நிகழ்வு என்று குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பியாகக் கருதப்படும் மன்மோகன் சிங், புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் வியாழக்கிழமை (டிசம்பர் 26, 2024) இரவு காலமானார். அவருக்கு வயது 92.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT