Published : 27 Dec 2024 04:25 AM
Last Updated : 27 Dec 2024 04:25 AM
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உட்பட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் 14-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன்சிங் கடந்த 1932 செப்.26-ல் மேற்கு பஞ்சாபில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தவர். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கடந்த 1991-96 நரசிம்மராவ் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவி வகித்தார். பொருளாதார வல்லுநரான இவர் இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் தொடக்கத்துக்கு வித்திட்டவர். ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2004 மே மாதம் முதல் 2014 மே மாதம் வரை என தொடர்ந்து 2 முறை
பிரதமராக பதவி வகித்தார்.
மன்மோகன் சிங்குக்கு ஏற்கெனவே இதயநோய் உள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நினைவிழந்து மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை காண காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் திரண்டு வந்த வண்ணம் இருந்தனர். மத்திய அமைச்சர் நட்டாவும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் துணை ராணுவப்படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மன்மோகன் சிங் நேற்று இரவு காலமானார். உலகப் புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ், ஆக்ஸ்போர்டு, பல்கலைக்கழகங்களில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் மன்மோகன் சிங். பஞ்சாப், டெல்லி பல்கலைக்கழகங்களில் பணியாற்றி உள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றினார்.
மன்மோகன் சிங், ரிசர்வ் வங்கி கவர்னராக 1982 முதல் 1985 வரை பணியாற்றினார். 1985 முதல் 1987 வரை திட்டக்குழு துணைத் தலைவராக இருந்தார். 1990-91 வரை பிரதமரின் பொருளாதார ஆலோசகராகவும் பணி யாற்றினார். மன்மோகன் சிங்குக்கு குர்சரண் கவுர் என்ற மனைவி, 3 மகள்கள் உள்ளனர். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா,காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT