Published : 27 Dec 2024 03:26 AM
Last Updated : 27 Dec 2024 03:26 AM
சினிமா பிரபலங்களின் பவுன்சர்கள் மற்றும் தனியார் மெய்க்காப்பாளர்கள் அத்துமீறி நடந்துகொண்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை விடுத்தார்.
ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி கடந்த 4-ம் தேதி இரவு திரையிடப்பட்டது. இதனை காண அப்படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் வந்திருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பாஸ்கர் என்பவரின் மனைவி ரேவதி (35) உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜ் (9) படுகாயம் அடைந்தார். இது தொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அல்லு அர்ஜுனின் தந்தையும் தயாரிப்பாளருமான அல்லு அர்விந்த் நேற்று முன்தினம் ஹைதராபாத் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீதேஜை சந்தித்து நலம் விசாரித்தார். சிறுவனின் குடும்பத்துக்கு அல்லு அர்விந்த் இதுவரை ரூ.11 கோடியும், தெலங்கானா அரசு தரப்பில் ரூ.25 லட்சமும், புஷ்பா பட இயக்குநர் சுகுமார் மற்றும் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் தலா ரூ.50 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் தெலங்கு சினிமா பிரமுகர்களுடன் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று ஹைதராபாத்தில் ஆலோசனை நடத்தினார். சந்தியா திரையரங்கு நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: தெலுங்கு சினிமா துறை வளர்ச்சிக்கு இந்த அரசு உறுதுணையாக இருக்கும். அதே சமயம் மக்களின் பாதுகாப்பு மிக முக்கியமாகும். சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுக்கு இந்த அரசு இடம் அளிக்காது. உங்கள் ரசிகர்களை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது உங்கள் பொறுப்பாகும். மாநில வளர்ச்சிக்கும் சினிமா துறையின் பங்கு அவசியமாகும். போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டை தடுப்பது, மகளிர் பாதுகாப்பு போன்றவற்றில் அரசுக்கு சினிமா துறை துணை நிற்க வேண்டும். ஆன்மிக சுற்றுலா மற்றும் இயற்கை சுற்றுலாவுக்கு சினிமா பிரமுகர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
சினிமா பிரபலங்களின் பவுன்சர்கள் மற்றும் தனியார் மெய்காப்பாளர்கள் அத்துமீறி நடந்துகொண்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். உரிய பயிற்சி பெற்றவர்களை மட்டுமே நீங்கள் பவுன்சர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும். தெலங்கானாவில் எந்த படத்துக்கும் இனி சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படாது. பேரவையில் செய்த இந்த அறிவிப்பில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன். அரசு - சினிமா துறை இடையிலான விவகாரங்கள் தொடர்பாக ஒரு குழுவை நியமிப்போம். சினிமா டிக்கெட்டுகளின் விலை நிர்ணயம் உட்பட பல விவகாரங்களின் இவர்கள் பரிந்துரை வழங்கட்டும். ஹாலிவுட், பாலிவுட் போன்று ஹைதராபாத்தில் வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வோம். தெலங்கானாவில் சினிமா விருதுகள் வழங்கப்படுவதில்லை எனும் பேச்சு உள்ளது. அதற்கும் விரைவில் முடிவு காண்போம். இவ்வாறு முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசினார்.
இக்கூட்டத்தில் துணை முதல்வர் பட்டி விக்ரமார்க்கா, சினிமா துறை அமைச்சர் கோமிட்டி ரெட்டி வெங்கட்ரெட்டி, போலீஸ் டிஜிபி ஜித்தேந்தர், தயாரிப்பாளர் அல்லு அர்விந்த், இயக்குநர் ராகவேந்திர ராவ், நடிகர்கள் நாகார்ஜுனா, வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT