Published : 27 Dec 2024 03:07 AM
Last Updated : 27 Dec 2024 03:07 AM
பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் தவறான இந்திய வரைபடம் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவியில் 1924-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி அண்ணல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இதன் 100வது ஆண்டையொட்டி, அங்குகாங்கிரஸ் சிறப்பு செயற்குழு கூட்டம் அதன் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, காங்கிரஸின் மூத்த தலைவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறும் போது, “அரசியலமைப்பு சட்டத்தின் மீது பாஜக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தை வரையறுத்த அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவதூறாக பேசியுள்ளார். இந்த விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும். நடப்பு டிசம்பர் மாதம் முதல் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி வரை மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை எழுப்ப உள்ளோம். இதுதொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டுக்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் வைக்கப்பட்டிருந்த இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் இடம்பெறவில்லை. இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா, ‘‘பெலகாவியில் காங்கிரஸ் ஒட்டிய பதாகை, சுவரொட்டிகளில் தவறான இந்திய வரைபடம் இடம்பெற்றுள்ளது. அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட் பகுதியும், தற்போது சீன நிர்வாகத்தின் கீழ் உள்ள அக்சாய் சின் பகுதியும் இல்லை. அவை ஜம்மு காஷ்மீரின் ஒருங்கிணைந்த பகுதிகளாகும். இதனை காங்கிரஸ் மறந்திருக்கிறது. ராகுல் காந்தி எப்போதும் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் ஆதரவாக இருப்பார்”என விமர்சித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT