Published : 26 Dec 2024 11:29 PM
Last Updated : 26 Dec 2024 11:29 PM
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தனது 92 வயதில் காலமானார். பலவீனமானப் பிரதமர் என விமர்சிக்கப்பட்ட அவர், அணுகுண்டு ஒப்பதம் விவகாரத்தில் சாதித்து காட்டினார்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை (டிச.26) மாலை தனது அரசு குடியிருப்பில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால், இரவு சுமார் 8 மணிக்கு அவர் டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஆறு பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இரவு 9.51 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. சோனியாகாந்தி, ராகுல் பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் எய்ம்ஸுக்கு விரைந்தனர்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2004 முதல் 2014 வரை தொடர்ந்து இரண்டு முறை மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். இதற்கு முன் காங்கிரஸ் பிரதமராக இருந்த நரசிம்மராவ் ஆட்சியில் முதன்முறையாக நிதியமைச்சராக அமர்த்தப்பட்டார். இந்திய அரசியலில் மன்மோகன் சிங் செய்த பொருளாதாரப் புரட்சி இன்றும் நினைவுகூரப்படுகிறது.
பொருளாதராப் பேராசிரியராக இருந்த மத்திய நிதியமைச்சர் பதவியில் அமர்ந்த மன்மோகன், 1991ல் பல பொருளாதார சீர்திருத்தங்களை செய்தார். அதேசமயம், அவர் நாட்டின் உயரிய பதவியில் அமர்ந்தபோது, மிகவும் பலவீனமான பிரதமராகவும் கருதப்பட்டார்.
ஆனால், 2008-ல் உலகம் முழுவதிலும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை இந்தியாவில் திறமையுடன் சமாளித்தார். இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதால், உலகம் முழுவதும் வியந்து நின்றது.
ஏனெனில், 'பலவீனமானவர்' என்று கருதப்பட்ட மன்மோகன் சிங் அணுசக்தி ஒப்பந்தத்தில் அற்புதம் செய்ததாகக் கருதப்பட்டார். இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாக்க கடுமையான நிலைப்பாட்டையும் அவர் காட்டி இருந்தது பாராட்டை பெற்றது.
உலக நாடுகளின் முன் இந்தியாவின் தேசநலன் கருதி எடுக்கப்பட்ட முடிவுகளில் பிரதமர் மன்மோகன் செய்தது பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் இந்தியா மீது விதிக்கப்பட்ட அணுசக்தி தடைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு மைல்கல் ஆகும்.
அதற்காக மன்மோகன் சிங் அனைத்து அரசியல் எதிரிகளையும் தோற்கடித்தார். இந்தியாவின் பிரதமராக, நாட்டின் வரலாற்றின் திசையை மாற்றியமைக்கும் இத்தகைய முடிவுகளை அவர் எடுத்தார். பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசு, இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவை நம்பியிருந்தது. இக்கட்சிகள், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தனர். சிபிஐ(எம்) கட்சியின் பொதுச் செயலாளராக ஹர்கிஷன் சிங் சுர்ஜித்துக்குப் பதிலாக பிரகாஷ் காரத் பதவியேற்றதும் இடதுசாரிகளுடன் மன்மோகன் சிங்கின் பிரச்சனை தொடங்கியது. சாந்த குணத்திற்கும் அமைதியான குரலுக்கும் பேர்போன மன்மோகன் சிங், இடதுசாரிகளின் பிரச்சனையை எளிதாக சமாளித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT