Published : 26 Dec 2024 10:34 PM
Last Updated : 26 Dec 2024 10:34 PM
புதுடெல்லி: உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 92. மன்மோகன் சிங் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த மன்மோகன் சிங் வியாழக்கிழமை (டிச.26) இரவு 8.06 மணிக்கு உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
2004 முதல் 2014 வரை இந்திய நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், இந்த ஆண்டு தொடக்கத்தில் ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தியாவின் ஒரே சீக்கிய பிரதமராக இருந்த மன்மோகன், நரசிம்ம ராவ் அமைச்சரவையில் 1991-ல் நிதியமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
பஞ்சாபில் 1932 செப்டம்பர் 26-ல் பிறந்த மன்மோகன் சிங், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1957-ல் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார மேற்படிப்பை முடித்த அவர், தொடர்ந்து 1962-ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டி.ஃபில் பட்டம் பெற்றார்.
பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில் பேராசிரியராக பணியாற்றிய மன்மோகன் சிங் 1971-ல் மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகராக இணைந்தார். அடுத்த ஆண்டே நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி உயர்வு பெற்றார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT