Published : 26 Dec 2024 03:16 AM
Last Updated : 26 Dec 2024 03:16 AM
கஜுராஹோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு நினைவு அஞ்சல்தலை, நாணயத்தை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, ரூ.44,605 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள கென்-பெட்வா நதிகள் இணைப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 100-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, மத்திய பிரதேச மாநிலம் கஜுராஹோ சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் வாஜ்பாய் நினைவு அஞ்சல்தலை, நாணயத்தை வெளியிட்டார். பின்னர், கென் - பெட்வா ஆறுகள் இணைப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். மாநில முதல்வர் மோகன்யாதவ், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ரூ.44,605 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின்கீழ் தவுதான் அணை கட்டப்படும். அங்கிருந்து இரு ஆறுகளுக்கு இடையே 221 கி.மீ. தூரத்துக்கு இணைப்பு ஏற்படுத்தப்படும். இதன்மூலம் மத்திய பிரதேசத்தின் 10 மாவட்டங்களை சேர்ந்த 44 லட்சம் பேருக்கும், உத்தர பிரதேசத்தின் 21 லட்சம் பேருக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
இதுதவிர, சுமார் 2 ஆயிரம் கிராமங்களை சேர்ந்த 8.11 ஹெக்டேர் நிலம் நீர்ப்பாசன வசதியை பெறும். இதன்மூலம் 7.18 லட்சம் விவசாய குடும்பங்கள் பயனடையும். மேலும் நீர்மின்சக்தி திட்டம் மூலம் 103 மெகாவாட் மின்சாரத்தையும், சூரிய மின்சக்தி திட்டம் மூலம் 27 மெகாவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய இந்த திட்டம் வகை செய்யும். இதுதவிர, மத்திய பிரதேசத்தின் கந்த்வா நகரில் நிறுவப்பட்டுள்ள ஓம்காரேஷ்வர் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டத்தையும் பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
வெள்ளம் மற்றும் வறட்சிக்கு தீர்வாக, நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்தை வாஜ்பாய் தலைமையிலான அரசு முன்மொழிந்தது. இதன் முதல் திட்டமாக கென் - பெட்வா ஆறுகள் இணைப்பு இருக்கும் என கருதப்படுகிறது. 1,153 கிராம சேவா சதன்களை ரூ.437 கோடியில் கட்டுவதற்கான திட்டத்துக்கும் பிரதமர் மோடி பூமி பூஜை செய்தார்.
இதைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: சுதந்திரத்துக்கு பிறகு, பாபாசாகேப் அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வை இந்தியாவின் நீர்வளம் மற்றும் நீர் சேமிப்பு முயற்சிகளுக்கு வழிகாட்டியது. அவரது முயற்சியால் தான் இன்றும்கூட மத்திய நீர்வள ஆணையம் இயங்குகிறது.
ஆனால், காங்கிரஸ் கட்சி அவருக்கு உரிய அங்கீகாரம் தரவில்லை. நாட்டை ஆட்சி செய்வது தங்கள் பிறப்புரிமை என்று காங்கிரஸ் நம்பியது, ஆனால், நல்லாட்சி வழங்க தவறிவிட்டது. மக்களுக்கு நன்மை செய்யாத அறிவிப்புகளை வெளியிடுவதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள். காங்கிரஸ் ஆட்சியின்போது அடிக்கல் நாட்டப்பட்ட பல திட்டங்கள் முடிவடைய 35 முதல் 40 ஆண்டுகள் வரை தாமதம் ஆனது.
மத்திய அரசு தற்போது செயல்படுத்தி வரும் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டம், மத்திய பிரதேச அரசு செயல்படுத்தும் மகளிர் நிதியுதவி திட்டம் ஆகியவற்றால் விவசாயிகளும், பெண்களும் பயனடைந்து வருகின்றனர். வாஜ்பாயின் தொலைநோக்கு பார்வை என்னை போன்ற ஆர்வலர்கள் உட்பட பல தலைமுறையினருக்கு உத்வேகம் அளித்துள்ளது. நாட்டின் முன்னேற்றத்தில் அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். மக்கள் நலனில் கவனம் செலுத்துவதிலும், அரசின் திட்டங்கள் மக்களுக்கு பயனளிப்பதை உறுதி செய்வதிலும்தான் பாஜகவின் வெற்றி உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT