Published : 25 Dec 2024 06:10 PM
Last Updated : 25 Dec 2024 06:10 PM

நாட்டின் நீர் பாதுகாப்புக்கு வழிகாட்டிய அம்பேத்கருக்கு உரிய பெருமையை காங். கொடுக்கவில்லை - பிரதமர் மோடி

கஜூராஹோ (மத்திய பிரதேசம்): "இந்தியாவின் தண்ணீர் பாதுகாப்பு முயற்சிகளுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் வழிநடத்தினார். ஆனால் இந்த நீர் பாதுகாப்பு முயற்சிக்கு அம்பேத்கருக்கு காங்கிரஸ் கட்சி பெருமையைக் கொடுக்கவில்லை" என்று பிரதமர் மோடி காங்கிரஸ் மீது தாக்குதல் தொடுத்துள்ளார்.

மத்திய பிரதேசத்தின் கஜூராஹோவில் கென்-பெட்வா நதிகளை இணைக்கும் திட்டம் மற்றும் பிற வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: "எங்கு நல்லாட்சி நடக்கிறதோ அங்கு தற்கால சவால்களுக்கும் எதிர்காலத்துக்கும் கவனம் செலுத்தப்படுகின்றன.

துரதிருஷ்டவசமாக காங்கிரஸ் அரசுகள் நீண்ட காலமாக நாட்டை ஆண்டது. ஆட்சியை அவர்கள் தங்களின் பிறப்புரிமையாக நம்பினர். ஆனால் அவர்கள் உண்மையாக ஆட்சி நடத்தவில்லை. காங்கிரஸ் இருக்கும் இடத்தில் ஆட்சி நடக்காது.

கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசுகள் அறிவிப்புகளை வெளியிடுவதில் நிபுணர்களாக இருந்தனர். ஆனால் அதனால் மக்கள் பயன்பெறவில்லை. திட்டங்களை செயல்படுத்துவதில் காங்கிரஸ் அரசு தீவிரம் காட்டவில்லை. இன்று நாம் பிரதம மந்திரி கிஷான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் பலனை காண்கிறோம். அதன் மூலம் மத்திய பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.12,000 பெறுகின்றனர். இங்கு லட்லி பெஹன் யோஜனா திட்டம் உள்ளது. பெண்களுக்கு நாங்கள் வங்கி கணக்கு தொடங்கவில்லை யென்றால் அந்தத்திட்டம் எவ்வாறு வெற்றி பெற்றிருக்கும்?

இந்த நிலைமை வந்ததற்கு காங்கிரஸ் தண்ணீர் பிரச்சினை பற்றி சிந்திக்காதது தான் காரணம். நாடு சுதந்திரம் அடைந்த பின்பு முதலில் செய்யப்பட்ட விஷயம் ஜல் சக்தி தான். யார் அதைப் பற்றி சிந்தித்தது.

சுதந்திரத்துக்கு பின்பு பாபாசாகேப் அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வைதான் இந்தியாவின் நீர் வளம் மற்றும் பாதுகாப்பு முயற்சிக்கு வழிகாட்டியது. அவரது முயற்சிக்கு மத்திய நீர்வளத்துறை இன்றும் கடமைப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் அவருக்கு ஒருபோதும் அதன் பெருமையைக் கொடுக்கவில்லை.

வாஜ்பாய் அரசு வந்த பிறகு தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் 2004ல் காங்கிரஸ் அனைத்து முயற்சிகளையும் சிதைத்தது. இன்று இந்த அரசு, நதிகள் இணைப்பு திட்டங்களில் கவனம் செலுத்துகிறது." இவ்வாறு பிரதமர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x