Published : 25 Dec 2024 04:08 PM
Last Updated : 25 Dec 2024 04:08 PM

‘‘ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்தது தவறு’’ - காங்கிரஸ் பொருளாளர் அஜய் மக்கான்

புதுடெல்லி: மாசுபாடு, குடிமை வசதிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற பல்வேறு பிரச்சினைகளில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், தவறான நிர்வாகம் தொடர்பாக ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா கட்சிகளை குறிவைத்து 12 அம்ச வெள்ளையறிக்கையை காங்கிரஸ் கட்சி புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான், இரு கட்சிகளுக்கும் எதிராக‘மவுக்கா மவுக்கா, ஹர் பார் தோக்கா’ என்ற வெள்ளையறிக்கையை வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குறித்து ஒரு வர்த்தையில் சொல்லவேண்டுமென்றால், ஃபர்சிவால். நாடு முழுவதும் மோசடி மன்னன் ஒருவர் உண்டென்றால் அது அரவிந்த் கேஜ்ரிவால் தான். அதனால் தான் கேஜ்ரிவால் மீதும் மத்திய அரசின் மீதும் வெள்ளையறிக்கையுடன் வந்திருக்கிறோம்.

டெல்லியில் துணைநிலை ஆளுநர் உங்களைத் தடுக்கிறார் என்றால் பஞ்சாப்பில் அதனைச் செய்யுங்கள். யார் உங்களைத் தடுத்தது. உங்களுக்கு அங்கு முழுஅதிகாரம் கொண்ட அரசு உள்ளது. அங்கு ஏன் ஜன் லோக்பாலை நீங்கள் உருவாக்கவில்லை. இவையெல்லாம் ஒரு சாக்கு. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜன் லோக்பால் பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வந்த கட்சி ஆம் ஆத்மி. தற்போது அவர்கள் அதை மறந்து விட்டார்கள்.

டெல்லியை லண்டன் போல் ஆக்குவோம் என்று சென்னவர்கள், தேசிய தலைநகர் மாசுபடுவதில் முதலிடத்தில் இருக்கும் நிலைக்கு உருவாக்கியுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்தது தவறு, அதனைத் திருத்தி கொள்ளவேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. 2013-ல் 40 நாட்கள் ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்தது தான் டெல்லியின் இன்றைய அவலநிலையும், காங்கிரஸ் கட்சி இங்கு பலவீனம் அடைந்ததற்கும் காரணம்.

ஒருவேளை டெல்லியின் தற்போதைய நிலைக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். டெல்லியில் கூட்டணி அமைப்பதன் மூலம் மீண்டும் ஒரு தவறு நிகழ்ந்திருக்கலாம் என்று நான் நம்புகிறேன். அது சரிசெய்யப்படவேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது மக்கானுடன், அகில இந்திய காங்கிரஸ் கட்சி டெல்லி பொறுப்பாளர் காசி மொகத் நிஜாமுதீன், டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ், துணைத் தலைவர் டேனிஷ் அப்ரார் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோர் இருந்தனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா கட்சிகள் உடனடியாக பதில் அளிக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x