Published : 02 Jul 2018 11:05 AM
Last Updated : 02 Jul 2018 11:05 AM

புதிய மாணவர்களை வரவேற்கும் வாசகம் எழுதுவதில் மோதல்: கல்லூரி வளாகத்தில் ஒருவர் அடித்துக் கொலை

கேரள மாநிலக் கல்லூரி ஒன்றில் புதியவர்களை வரவேற்கும் வாசகம் எழுதுவதில் ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் எஸ்எப்ஐ மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார்.

எர்ணாக்குளம் மகாராஜா கல்லூரியில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. கல்லூரி வளாக சுவரில் புதிய மாணவர்களை வரவேற்கும் வாசகங்கள் எழுதுவதில் போட்டி நிலவியதாகக் கூறப்படுகிறது. இந்தப் போட்டி மோதலா மாறி கலவரமாக வெடித்துள்ளது. இதில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் எஸ்எப்ஐ மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர் கேம்பஸ் முன்னணி மாணவர்களால் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டார்.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள வடவாடாவைச் சேர்ந்தவர் அபிமன்யூ, (20). இவர் பி.எஸ்சி., சுற்றுச்சூழல் வேதியியல் படித்து வருகிறார். இவர் மோதலில் படுகாயமடைந்தநிலையில் அருகிலுள்ள எர்ணாக்குளம் அரசு பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

கவலைக்கிடமான நிலையில் உயிருக்குப் போராடிய அபிமன்யூ சிகிச்சை பலனின்றி இறந்ததாகக் கூறப்படுகிறது. இவர் எஸ்எப்ஐ சங்கத்தின் இடுக்கி மாவட்டப் பிரிவில் உறுப்பினராக இருந்தவர்.

இன்னொரு எஸ்எப்ஐ உறுப்பினரான அர்ஜுன் (19), இவர் இளங்கலை தத்துவம் பயின்று வருபவர். இவரும் மோதலில் படுகாயமடைந்துள்ளார். கவலைக்கிடமான நிலையில் உடனடியாக எர்ணாக்குளம் மெடிக்கல் டிரஸ்ட் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் அவர் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகத் தெரிவித்தனர்.

கேம்பஸ் முன்னணி, தேசிய வளர்ச்சி முன்னணி சங்கங்களைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள சந்தேகப்படும்படியான நபர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

கேரளாவில் மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என எஸ்எப்ஐ மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x