Published : 24 Dec 2024 01:28 AM
Last Updated : 24 Dec 2024 01:28 AM
வங்கதேசத்தில் நடத்தப்படும் இந்துக்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று வங்கதேச நாட்டு மக்களுக்கு 685 முன்னாள் நீதிபதிகள், தூதர்கள் உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளனர்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், அங்குள்ள இந்து கோயில்களும் தாக்கப்பட்டன. இதனால் அங்கு வசிக்கும் இந்துக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்களில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் வங்கதேசத்தில் அமைதியை ஏற்படுத்தவேண்டும் என்று வங்கதேச நாட்டு மக்களுக்கு இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் தூதர்கள், நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளதாவது: இந்தியா, வங்கதேசம் ஆகிய 2 நாடுகளிடையே நீண்டகாலமாக நட்புறவு நிலவுகிறது. அது தொடரவேண்டும். அங்கு வசிக்கும் இந்துக்களுக்கு பாதுகாப்பு வேண்டும். உடனடியாக வங்கதேசத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், அவர்களின் சொத்துகள், உடமைகள், கோயில்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படவேண்டும்.
வங்கதேசத்தில் மோசமடைந்து வரும் சூழ்நிலையை இந்திய மக்கள் அதிக எச்சரிக்கையுடனும் கவலையுடனும் பார்க்கின்றனர். அந்த நாட்டில் அராஜகச் சூழல் நிலவுகிறது. அங்கு, அந்த நாட்டின் போலீஸார் இன்னும் முழுமையாக பணிக்குத் திரும்பவில்லை என்று தெரிகிறது. அங்கு இயல்புநிலை திரும்பும் வரையில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வங்கதேசம் உள்ளது. வங்கதேசத்தில் வசிக்கும் சிறுபான்மையினரான இந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை வங்கதேச மக்கள் உறுதி செய்யவேண்டும்.
வங்கதேசம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை நியாயமான தேர்தல் மூலம் மட்டுமே சமாளிக்க முடியும். இந்த இடைக்காலத்தில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், அவர்களின் சொத்துக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அவர்களை வெளியேற நிர்ப்பந்தித்தல் போன்ற தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த நிலைமை சகிக்க முடியாதது. மேலும், இது இந்திய மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது. வங்கதேசம் உருவாக்கப்பட்டதில் இருந்து, 50 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களைத் தாங்கி வரும் அமைதி, நட்பு மற்றும் புரிதல் ஆகியவற்றின் பாதையில் செல்லும் 2 நாட்டு மக்களுக்கும் இது உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த திறந்த கடிதத்தில் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி, 19 ஓய்வு பெற்ற நீதிபதிகள், 34 முன்னாள் தூதர்கள், துணைவேந்தர்கள் உள்ளிட்ட 300 கல்வியாளர்கள், 139 யுபிஎஸ்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த முன்னாள் அரசு உயர் அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT