Published : 01 Jul 2018 11:11 AM
Last Updated : 01 Jul 2018 11:11 AM
இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையும் ராணுவ உத்தியும் தலைகீழாகக் கவிழ்ந்துவிட்ட ரயிலைப் போலக் கிடக்கின்றன. அரசின் தவறான நடவடிக்கைகள் அதன் செயல் வேகத்தை முறித்துவிட்டன. ‘டூ-பிளஸ்-டூ’ பேச்சுவார்த்தையை மூன்றாவது முறையாக ஒத்திவைத்து இந்தியாவை அவமானப்படுத்திவிட்டது அமெரிக்கா. நாம் இப்போது பார்க்கும் காட்சி ஓராண்டுக்கு முன் பார்த்ததைப்போல இல்லை. வளரும் சக்திவாய்ந்த நாட்டின் பிரதமராக, ஆற்றல் மிக்க தலைவராக, உறுதியான முடிவுகளை எடுப்பவராக மோடி பார்க்கப்பட்டார். பாரீஸ் பருவநிலை மாறுதல் தொடர்பான மாநாட்டில்கூட வலுவாகத் தலையீடு செய்யும் நிலையில் இருந்தார். படிப்படியாக செல்வாக்கும் வளர்ச்சியும் பெற்ற இந்தியா, இப்போது உலக அரங்கில் கவனிக்கப்படுவதில்லை என்பதே அதிர்ச்சிகரமான உண்மை.
மிக வலுவாக உயர்ந்துகொண்டு வந்த இந்தியா ஏன் இப்படிப் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இந்தியாவின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட இரண்டு மாற்றங்களே இதற்குக் காரணம். முதலாவது அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது செல்வாக்கை வளர்த்து வருவது. இரண்டாவது சீன அரசு உலக அரங்கில் தன்னை வலுப்படுத்தி வருவது.
மோடி நம் நாட்டுக்குப் பொருளாதார நன்மைகளைத் தரும் விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தினார். அதை அவருடைய கட்சியும் ராஜீயத்துறையைச் சேர்ந்த சிலரும் வரவேற்றனர். எனவே மோடி ஆட்சியின் முதல் மூன்று ஆண்டுகளில் அவருடைய சுற்றுப் பயணங்களால் பெரும் வெற்றி என்று மகிழ்ந்தோம். உலக அளவில் அணு ஏவுகணைகளைத் தயாரிக்கும் நாடுகளின் குழுவில், பொறுப்புள்ள நாடாகக் கருதப்பட்டு இந்தியாவும் கருத்தளவில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. துணைக் கண்டம் பற்றிய அமெரிக்கக் கண்ணோட்டம் மாறியது. ராணுவ ஒப்பந்தம் சாத்தியமென்ற நிலைகூட ஏற்பட்டது. பில் கிளிண்டனின் இரண்டாவது பதவிக்காலம் முதலே அமெரிக்காவுடன் இந்திய உறவு வளர்ந்து வருகிறது. அத்துடன் இந்தியாவின் 15 ஆண்டுக்கால பொருளாதார வளர்ச்சியும் உதவியது. மோடி தன்னுடைய ஆற்றல், தனிப்பட்ட அணுகுமுறை, நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு இருக்கும் பெரும்பான்மை ஆகிய காரணிகளால் உறவுகளை உறுதிப்படுத்துவதை விரைவுபடுத்தினார். அப்புறம் எங்கே தவறு நேர்ந்தது?
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையெடுத்ததும், உலக அரங்கில் சீனா தன்னை வல்லரசாக நிலைநிறுத்த எடுத்த நடவடிக்கைகளுமே இதற்குக் காரணம். இவை இரண்டுக்குமே மோடி அரசு காரணம் அல்ல. ஈரான் தொடர்பான கொள்கையை டிரம்ப் மாற்றிக்கொண்டதால் சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை ஏகமாக உயரத் தொடங்கியிருக்கிறது. அது இந்தியாவின் உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் வெளிநாட்டு வர்த்தகத்தையும் கலகலக்க வைக்கிறது. இந்தியாவின் கவலையைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் பாகிஸ்தானுடன் சேர்ந்து பொருளாதாரப் பாதையை அமைப்பதில் சீனா தீவிரமாக இறங்கியிருக்கிறது.
வர்த்தகம் தொடர்பாகவும் இப்படி தவறாகப் பேசியது ஆளும் கட்சி. இதய அடைப்புகளை நீக்கும் ஸ்டென்ட் கருவிகளின் விலையைக் குறைத்தது நாங்கள்தான் என்று பிரச்சாரத்தில் பேசியது. உடனே டிரம்ப் எச்சரிக்கையடைந்து எதிர்வினையாற்றத் தொடங்கிவிட்டார். ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீது இந்தியா விதிக்கும் இறக்குமதி வரி கடுமையாகிவிட்டதாக அவர் கூறியது பெரிய நகைச்சுவை. இந்த ரக பைக்குகள் இறக்குமதியால் இந்திய பைக்குகள் எதற்கும் வியாபார ரீதியாக பெரிய போட்டியோ, விற்பனை இழப்போ ஏற்பட்டுவிடவில்லை. ஸ்டென்டுகளின் விலையைக் குறைக்குமாறு கட்டாயப்படுத்தியதைவிட ஏழைகள் வாங்கும் ஸ்டென்டுகளுக்கு மானியம் தந்திருக்கலாம். இதனால் அமெரிக்காவின் பதில் நடவடிக்கைகளைத் தவிர்த்திருக்க முடியும்.
நான்கு ஆண்டுகளில் நான்கு பாதுகாப்பு அமைச்சர்கள். முன்னாள் படை வீரர்களுக்கு அளிக்கும் ஓய்வூதியம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் படைகளில் இருப்போருக்குத் தரப்படும் ஊதியத்தை மிஞ்சப் போகிறது. அத்துடன் பாதுகாப்புத் துறைக்கான மூலதன ஒதுக்கீட்டு அளவையும் மிஞ்சிவிட்டது. இப்படியே போனால் காலாவதியாகிவிடும் நம்முடைய ராணுவம். ஆண்டுக்கு மூன்று போர்க்கப்பல்களை சீனா பிரம்மாண்டமாகத் தயாரித்து கடற்படையில் சேர்க்கிறது. நாமோ மூன்று ஆண்டுகளுக்கு ஒரு கப்பலை மட்டுமே தயாரிக்க முடிகிறது. மேக் இன் இந்தியா, பிபிபி என்றெல்லாம் கூப்பாடு போடப்பட்ட பிறகு அந்த வகையில் நாம் சாதித்ததெல்லாம் வெறும் பூஜ்யம்தான். இந்தியா உயர்கிறது, உலகம் நம்முடைய ஞானத்தை வியந்து ஆலோசனைக்காகக் காத்திருக்கிறது, யோகாசன நாளை உலகமே கொண்டாடுகிறது, கிறிஸ்தவத்துக்கு இணையாக இந்தியாவின் மென் சக்தி பரவத் தொடங்கிவிட்டது என்றெல்லாம் ஆளும் தரப்பினர் பேசுகின்றனர். இந்தியா உலகத்துக்கே குருவாகிவிட்டது என்றே ஆரஎஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பிரணாப் முகர்ஜி கலந்து கொண்ட கூட்டத்தில் பேசினார்.
அப்படியானால் அமெரிக்காவுடனான உறவில் வீழ்ச்சி ஏன்? வங்கதேசத்தைத் தவிர பிற பக்கத்து நாடுகள் சீனத்தை அண்டுவது ஏன்? டிரம்ப் ஏன் விஸ்வகுருவான இந்தியப் பிரதமர் மீது சிடுசிடுப்பைக் காட்டுகிறார்? அமெரிக்க நிர்வாகத்தில் மிகப் பெரிய பதவி எதிலும் இல்லாத நிக்கி ஹேலி ஏன் டெல்லி வந்து, ‘ஈரான் கொள்கையை மாற்றிக்கொள்ளுங்கள்’ என்று எச்சரிக்கிறார்? சீன அதிபருடன் மோடி பங்கேற்கும் சமீபத்திய நிகழ்ச்சியில் மோடியின் உடல் மொழி ஏன் அடங்கி – ஒடுங்கி காணப்படுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் வழியாக சீனத்தின் பொருளாதாரப்பாதை செல்வதை இந்தியத் தலைவர்கள் கண்டிப்பதை நிறுத்தி எத்தனை நாள்களாயிற்று?
மூச்சுவிடாமல் கத்தி நம்முடைய வெற்றிகளைக் கொண்டாடியது போதும். அமைதியடைந்து மூச்சை ஆழ்ந்து உள்ளே இழுத்து, உலக அரங்கில் நம்முடைய உண்மையான நிலை என்ன என்று ஆத்மார்த்தமாக சிந்தித்துப் பார்ப்போம்.
சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்,
முதன்மை ஆசிரியர்
தமிழில்: ஜூரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT