Published : 23 Dec 2024 05:58 PM
Last Updated : 23 Dec 2024 05:58 PM

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டாய தேர்ச்சி முறை ரத்து: மத்திய அரசு அதிரடி

கோப்புப் படம்

புதுடெல்லி: பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய கல்வித் துறை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

ஆல் பாஸ் இல்லை: கல்வி உரிமைச் சட்டத்தில் 2019-ம் ஏற்பட்ட திருத்தம் மூலம் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயத் தேர்ச்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், கட்டாயத் தேர்ச்சி கொள்கையில் மீண்டும் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதில், 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டின் இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால், அவர்களுக்கு இரண்டு மாதத்துக்குள் மறுதேர்வு வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் தோல்வி அடையும் பட்சத்தில் மீண்டும் அதே வகுப்பிலேயே தொடர்வார்கள். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் கூடுதல் வழிகாட்டுதலை வழங்குவார்கள். இருப்பினும், தொடக்கக் கல்வியை முடிக்கும் முன்னர் எந்த மாணவர்களும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று அரசு உறுதியளித்துள்ளது.

எந்தெந்த பள்ளிகளுக்கு பொருந்தும்? - இந்த புதிய விதியானது கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகள் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த அணுகுமுறையை தேர்வு செய்யலாம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

குஜராத், ஒடிசா, மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் தோல்வியுற்ற மாணவர்கள் மேல் வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, தமிழகம் முதலான மாநிலங்கள் இத்தகைய முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது கவனிக்கத்தக்கது. ஹரியானா மற்றும் புதுச்சேரி இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்த விதிகளுக்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிராமங்களில் மாணவர்கள் கல்வி கற்பதை தடுத்து நிறுத்தும் முயற்சி என கூறுகின்றனர். இதனால், பள்ளிகளில் டிராப் அவுட் எனப்படும் இடைநிறுத்தம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்கின்றனர்.

ஆர்டிஇ சட்டம்: இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. கடந்த 1.4.2010-ல் அந்தசட்டம் நடைமுறைக்கு வந்தது. ஒரு கி.மீ. தொலைவுக்குள் அனைத்துக் குழந்தைகளுக்கும் தொடக்கக் கல்வி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்பதே கல்வி உரிமைச் சட்டத்தின் முதன்மையான இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x