Published : 23 Dec 2024 02:01 AM
Last Updated : 23 Dec 2024 02:01 AM
புதுடெல்லி: உலகளவில் பருவ நிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சினையாகி வருகிறது என்று ஏற்கெனவே இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி கவலை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நாராயணமூர்த்தி கூறியதாவது: பருவ நிலை மாற்றம் குறித்த பிரச்சினைக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்வு காணாவிட்டால், எதிர்காலத்தில் வாழ தகுதியற்ற சிறு நகரங்களில் இருந்து ஏராளமான மக்கள் புனே, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு குடிபெயரும் அபாயம் உள்ளது. அதுவும் அவ்வளவு எளிதல்ல. ஏனெனில், போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற காரணங்களால் அந்த நகரங்களுக்கு குடிபெயர்வதும் எளிதல்ல.
பருவ நிலை மாற்றத்தை தடுக்க கார்ப்பரேட் நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் மனது வைத்தால், பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். இந்தியா, ஆப்பிரிக்காவின் சில நாடுகளில் வெப்பம் அதிகரித்து வருகிறது. அதன்படி பார்த்தால் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் சில பகுதிகள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும். அதனால் வேறு நகரங்களுக்கு மக்கள் மொத்தமாக குடிபெயரும் நிலை உருவாகும்.
இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனர்கள் என்ற முறையில் நாம்தான் அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இதுபோன்ற மொத்தமாக குடிபெயரும் நிலையை தடுக்க வேண்டும். இந்தியர்கள் எப்போதும் கடைசி நேரத்தில்தான் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து செயல்படுவார்கள். ஆனால், 2030-ம் ஆண்டிலேயே பருவ நிலை மாற்றத்தின் தீவிரம் அதிகரிக்கக் கூடும். இவ்வாறு நாராயணமூர்த்தி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT