Published : 23 Dec 2024 01:58 AM
Last Updated : 23 Dec 2024 01:58 AM

பரஸ்பர நிதி சங்கத்தைப் போல தேசிய ஓய்வூதிய திட்டத்தை ஊக்குவிக்க புதிய சங்கம் தொடக்கம்

பரஸ்பர நிதி சங்கத்தைப் போல தேசிய ஓய்வூதிய திட்டத்தை ஊக்குவிப்பதற்காக புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

பரஸ்பர நிதி நிறுவனங்களை இந்திய பங்குச் சந்தை வாரியம் கட்டுப்படுத்துகிறது. அதேநேரம் பரஸ்பர நிதி திட்டங்களை ஊக்குவிக்க பரஸ்பர நிதி சங்கம் (ஆம்பி) செயல்படுகிறது. இதுபோல, தேசிய ஓய்வூதிய நிதியை (என்பிஎஸ்) நிர்வகிக்கும் நிறுவனங்களை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (பிஎப்ஆர்டிஏ) கட்டுப்படுத்துகிறது.

இந்நிலையில், மும்பையில் ‘ஒய்வூதியத்துடன் எதிர்காலத்தை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற கருத்தரங்கில், தேசிய ஓய்வூதிய நிதி சங்கத்தை பிஎப்ஆர்டிஏ தலைவர் தீபக் மொஹந்தி தொடங்கி வைத்தார். அத்துடன் அதன் இலச்சினையையும் அறிமுகம் செய்தார். இந்நிகழ்ச்சியில் எஸ்பிஐ, எல்ஐசி, ஆக்சிஸ் பாங்க் மற்றும் இபிஎப்ஓ உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில் தீபக் மொஹந்தி பேசும்போது, “என்பிஎஸ் என்பது உலகிலேயே குறைவான செலவுடைய ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்தி திட்டத்தின் கீழ் இப்போது 8 கோடி பேரின் ரூ.14 லட்சம் கோடி நிர்வகிக்கப்படுகிறது. இது இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.15 லட்சம் கோடியாக அதிகரிக்கும். ஆனாலும் இதுகுறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாதது, அமைப்புசாரா தொழிலாளர்கள் அணுக முடியாத சூழல் உள்ளிட்ட பல சவால்கள் உள்ளன. இவற்றுக்கெல்லாம் தீர்வாக இந்த சங்கம் செயல்படும்” என்றார்.

மத்திய அரசின் நிதி சேவைகள் துறை செயலாளர் எம்.நாகராஜு பேசும்போது, “என்பிஎஸ் சங்கம் தொடங்கப்பட்டிருப்பது இத்துறையின் நிலையான வளர்ச்சியை குறிக்கிறது. இந்த சங்கத்தின் மூலம் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து ஆராயும் என உறுதி அளிக்கிறேன்” என்றார்.

எல்ஐசி தலைவர் சித்தார்த் மொஹந்தி பேசும்போது, “இந்த சங்கம் என்பிஎஸ் துறையினருக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையே பாலமாக செயல்படும். மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சந்தாதாரர்களுக்கு தேவையான சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை இந்த சங்கம் மேற்கொள்ளும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x