Published : 22 Dec 2024 04:14 PM
Last Updated : 22 Dec 2024 04:14 PM

டெல்லி அரசின் இரண்டு நலத்திட்டங்கள் - பயனாளிகள் பதிவு குறித்து கேஜ்ரிவால் அறிவிப்பு

படம்: சசி சேகர் காஷ்யப்

புதுடெல்லி: மகிளா சம்மன் யோஜனா மற்றும் சஞ்சீவினி யோஜனா ஆகிய இரண்டு புதிய நலத்திட்டங்களுக்கான பயனாளர்கள் பதிவு நாளை (டிச.23) தொடங்கும் என்று டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அதிஷி, முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோருடன் அரவிந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நமது தாய்மார்களும் சகோதரிகளும் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். பலர் வெளியில் வேலை செய்து தங்களின் குடும்பத்தினை நிர்வகிக்கிறார்கள். இந்த ரூ.2100 நமது மகள்கள் தங்களின் கல்லூரிப்படிப்பினை முடிக்க உதவி செய்யும். குடும்பத்தலைவிகளுக்கு அதிகரிக்கும் அவர்களின் குடும்பச் செலவுகளை சமாளிக்கவும், சேலை மற்றும் ஆடைகள் வாங்கவும் தங்களுக்கான தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள உதவும்.

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 வழங்கும் மகிளா சம்மன் யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டது முதல், அதற்கான பதிவு பற்றிய கேள்விகள் மற்றும் அழைப்புகளை பெற்றுக்கொண்டே இருக்கிறோம். இந்தத் திட்டத்துக்கான பதிவுகள் நாளை (திங்கள்கிழமை) முதல் தொடங்கும் என நான் இன்று அறிவிக்க விரும்புகிறேன்.

திட்டத்துக்கு பதிவு செய்வதற்காக நீங்கள் வரிசையில் நின்று உங்களின் நேரத்தினை வீணடிக்க வேண்டாம். எங்களின் ஆம் ஆத்மி தொண்டர்கள் தனிப்பட்ட முறையில் உங்களின் வீடுகளுக்கு வருவார்கள். தகுதிவாய்ந்த பெண்களை பதிவுசெய்து கொண்டு, அதற்கான பதிவு அட்டைகளை வழங்குவார்கள். அந்த அட்டையை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

அதேபோல் வரி செலுத்துவதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்துக்காக அயராது உழைக்கும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலும் ஓய்வு காலத்தில் புறக்கணிக்கப் படுகிறார்கள். முதுமை காலத்தில் மருத்துவச் செலவுகளை எவ்வாறு சமாளிப்பது என்பது அவர்களின் கவலையாக இருக்கும். அவர்களின் மருத்துவச்செலவுகளை சஞ்சீவினி யோஜனா மூலம் ஆம் ஆத்மி அரசு பார்த்துக்கொள்ளும் என்று அனைத்து மூத்த குடிமக்களுக்கும் நான் உறுதி அளிக்க விரும்புகிறேன்.

இந்த இரண்டு நலத்திட்டங்களுக்கான பதிவுகளும் ஒரே நேரத்தில் தொடங்கும். ஆம் ஆத்மி குழுக்கள் வீடு வீடாக சென்று பதிவுகளை உறுதி செய்யும். டெல்லியின் அனைத்து வாக்காளர்களும் இந்த திட்டங்களை பெற தகுதியானவர்களே. அதனால் உங்களின் வாக்காளர் அடையாள அட்டைகளைத் தயாராக வைத்திருங்கள்.

மக்கள் நலத்திட்டங்களை பெறுவதைத் தடுப்பதற்காக வாக்களார் அடையாள அட்டைகளை ரத்து செய்கிறார்கள். உங்களின் வாக்காளர் அடையாள அட்டை செயலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அது ரத்து செய்யப்பட்டிருந்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவியுங்கள். அவை மீண்டும் நிறுவப்படுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்.

பெண்களுக்கு அதிகாரமளிப்பதையும், முதியோர்களுக்கு சுகாதாரத்தினை உறுதி செய்வதிலும் இது மிகவும் குறிப்பிடத்தகுந்த படியாகும். டெல்லி முழுவதும் இந்தத் திட்டம் முழு வீச்சில் நாளை முதல் தொடங்கும். திட்டத்தினை தொடங்கி வைக்க நான் முதல்வர் அதிஷி மற்றும் மணீஷ் சிசோடியாவுடன் குறிப்பிட்ட சில இடங்களுக்குச் செல்கிறேன்." இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x