Published : 22 Dec 2024 02:43 PM
Last Updated : 22 Dec 2024 02:43 PM
குவைத்: குவைத் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அங்குள்ள ஸ்பிக் தொழிலாளர் முகாமுக்குச் சென்று இந்திய தொழிலாளர்களுடன் கலைந்துரையாடினார். அப்போது, நாட்டுக்கு அவர்கள் அளித்து வரும் பங்களிப்பைச் சுட்டிக்காட்டினார்.
தொழிலாளர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி கூறுகையில், "நான் வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 பற்றி பேசுகிறேன். ஏனென்றால், வேலைக்காக இங்கு வந்துள்ள எனது நாட்டின் தொழிலாளர் சகோதரர்கள், அவர்களுடைய சொந்த கிராமத்தில் எவ்வாறு ஒரு சர்வதேச விமானநிலையத்தை உருவாக்குவது என்று நினைக்கிறார்கள். இந்த சிந்தனை தான் நமது நாட்டின் பலம்.
நமது விவசாயிகள் எவ்வளவு கடினமாக வயல்களிலும், பணியிடங்களிலும் வேலை செய்கிறார்கள் என நாள் முழுவதும் நான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். அவர்களுடைய கடின உழைப்பு என்னை உத்வேகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அவர்களின் கடின உழைப்பை நான் பார்க்கும் போது, அவர்கள் 10 மணி நேரம் வேலை செய்தால் நான் 11 மணி நேரமும், அவர்கள் 11 மணி நேரம் வேலை செய்தால் நான் 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொள்கிறேன்.
நீங்கள் உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக கடினமாக உழைக்கிறீர்களா இல்லையா? நானும் என் குடும்பத்தினருக்காக கடினமாக உழைக்கிறேன். எனது குடும்பத்தில் 140 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதனால் நான் கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டும்.
இந்தியவில் இப்போது மிகவும் மலிவு விலையில் இணைத் தரவுகள் கிடைக்கின்றன. உலகின் எந்த மூலைக்கோ அல்லது இந்தியாவுக்குள்ளேயோ மிகக்குறைந்த செலவில் நாம் இப்போது ஆன்லைனில் பேச முடியும். நீங்கள் வீடியோ கான்ஃபரன்சிங் பேசினாலும் அதற்கான செலவும் மிகவும் குறைவு. மக்கள் தினமும் அவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசுவது மிகப்பெரிய வசதியாக உள்ளது." என்று தெரிவித்தார்.
குவைத் நாட்டின் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாஹ் அவர்களின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி வளைகுடா நாடான குவைத் சென்றிருக்கிறார். 43 ஆண்டுகளுக்கு பின்பு இந்திய பிரதமர் ஒருவர் குவைத்துக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.
அங்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டின் முதல் துணை பிரதமரும், பாதுகாப்பு மற்றும் உள்விகாரத்துறை அமைச்சருமான சேக் ஃபகத் யூசெஃப் சவுத் அல்-சபா, வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அலி அல் யாஹ்யா மற்றும் பல உயரதிகாரிகள் வரவேற்றனர்.
குறிப்பிடத்தகுந்த வகையில், சேக் சாத் அல் அப்துல்லா உள்விளையாட்டு மைதானத்தில் நடந்த ‘ஹலா மோடி’ என்ற சமூக விழாவில் குவைத்தில் வசிக்கும் புலம்பெயர் இந்தியர்கள் தங்களின் உற்சாகத்தினையும் மகிழ்ச்சியினையும் வெளிப்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT