Published : 22 Dec 2024 01:38 PM
Last Updated : 22 Dec 2024 01:38 PM

‘தேர்தல் ஆணையத்தின் நிறுவன ஒருமைப்பாட்டை அழிக்கும் திட்டமிட்ட சதி’: தேர்தல் விதி மாற்றத்துக்கு கார்கே எதிர்ப்பு

புதுடெல்லி: சில மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் ஆய்வு செய்வதைத் தடுக்கும் வகையில் தேர்தல் விதியை மாற்றியமைத்திருப்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை அழிக்கும் மோடி அரசின் திட்டமிட்ட சதியின் ஒரு பகுதி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மல்லிகார்ஜுன கார்கே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், "தேர்தல் நடத்தை விதிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் துணிச்சலான திருத்தம் என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் நிறுவன ஒருமைப்பாட்டை அழிப்பதற்கான மோடி அரசின் மற்றொரு திட்டமிட்ட சதித்தாக்குதலே. முன்பு தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்கினார்கள். இப்போது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், தேர்தல் குறித்த தகவல்களைத் தருவதை இறுக்கமாக்குகிறார்கள்.

வாக்காளர்கள் நீக்கம், மின்னணு வாக்கு இயந்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமை குறித்து காங்கிரஸ் கட்சி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதிய போதெல்லாம், தேர்தல் ஆணையம் அலட்சியமான தொனியில் பதில் அளித்தது, தீவிரமான புகார்களைக்கூட ஏற்கவில்லை.

தேர்தல் ஆணையம் பாதி - நீதித்துறை அமைப்பு என்ற போதிலும், அது சுதந்திரமாக செயல்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டின் மீதான மோடி அரசின் கட்டுப்படுத்தப்பட்ட அழிப்பு, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் மீதான முக்கிய தாக்குதலாகும். அவைகளைப் பாதுகாக்க நாங்கள் எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம்." இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மத்திய அரசின் இந்த தேர்தல் நடத்தை விதி திருத்தத்தை காங்கிரஸ் கட்சி சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் என்று தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறுகையில், "ஹரியானா பேரவைத் தேர்தலுக்கு பின்னர், தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் இறுதி வாக்காளர்கள் பட்டியலைக் கேட்டோம். அதைக் கொடுப்பது கட்டாயம் என்றபோதிலும், அவை வழங்கப்படவில்லை. அதன் பின்பு, நாங்கள் உயர் நீதிமன்றத்துக்குச் சென்றோம். தேவையான ஆவணங்களை கட்சிகளுக்கு வழங்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற ஆணைக்கு இணங்குவதற்கு பதிலாக, உடனடியாக அவர்கள் தேர்தல் விதிகளைத் திருத்துகிறார்கள். தேர்தல் ஆணையத்திலும், அதன் தேர்தல் நடைமுறைகளிலும் ஏதோ நடக்கிறது. தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியை அவர்கள் நீக்கியது ஏன்? தேர்தல் நடைமுறைகளை சீர்குலைக்கிறார்கள் என்பதற்கு இவையெல்லாம் தெளிவான சான்றுகள்" என்று தெரிவித்துள்ளார்.

என்ன திருத்தம்?: முன்னதாக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை, பொதுமக்களின் ஆய்வுக்கு கிடைக்கும் ஆவணங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் 1961-ன் விதி 93-ல் சில திருத்தங்களை மேற்கொண்டது. இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு தேர்தல் நடத்தை விதி 93 (2) (ஏ)-வில், ‘தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்பு அந்த விதியில், ‘தேர்தல் தொடர்பாக இந்த விதியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும்’ என மாற்றப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளின்படி, வேட்பாளரின் வேட்புமனுக்கள், தேர்தல் முகவர்கள் நியமனம், தேர்தல் முடிவுகள், செலவு கணக்குகள் போன்ற விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் மட்டுமே பொது ஆய்வுக்கு கிடைக்கும். மின்னணு ஆவணங்கள் பொது ஆய்வுக்கு இனி கிடைக்காது. இதனிடையே, நீதிமன்ற வழக்கு ஒன்று இந்தத் திருத்தங்களை மேற்கொள்ள வழிசெய்தது என்று மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x