Published : 22 Dec 2024 01:52 AM
Last Updated : 22 Dec 2024 01:52 AM

ஜெய்ப்பூர் விபத்தின்போது தீயில் எரிந்தபடி உதவி கேட்டு ஓடிய மெக்கானிக்: உதவாமல் வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் எல்பிஜி டேங்கர் லாரி மீது சரக்கு லாரி மோதியது. இதில் டேங்கர் லாரி வெடித்து சிதறி எல்பிஜி வாயு காற்றில் பரவியது. இதனால் சில மீட்டர் தொலைவில் இருந்த லாரி, பேருந்து உட்பட 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 35 பேர் பலத்த தீக்காயமடைந்தனர்.

விபத்து நேரிட்டபோது ஜெய்ப்பூரை சேர்ந்த மோட்டார் மெக்கானிக் ராதேஷியாம் (30) வேலை முடிந்து தனது வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். சமையல் காஸ் காற்றில் பரவியதால் ராதேஷியாம் உடல் முழுவதும் தீப்பற்றியது. அவர் சுமார் 600 மீட்டர் தொலைவு தீயில் எரிந்தபடி உதவி கேட்டு ஓடினார்.

அப்போது சாலையின் ஓரம் நின்றிருந்த வாகனஓட்டிகள் அவருக்கு உதவி செய்யாமல் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளனர். இறுதியாக தரையில் விழுந்த அவரிடம் ஒரு நபர் மட்டும் விசாரித்துள்ளார். ராதேஷியாம் அளித்த செல்போன் எண்ணில் அந்த நபர் விபத்து குறித்து தகவல் தெரிவித்து உள்ளார்.

இதைத் தொடர்ந்து ராதேஷியாமின் அண்ணன் அகேராம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தம்பியை மீட்டு அருகில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் அனுமதித்தார். இதுகுறித்து அகேராம் கூறியதாவது:

டேங்கர் லாரியில் இருந்து காற்றில் சமையல் காஸ் பரவியதால் சுமார் 200 மீட்டர் தொலைவுக்கு தீப்பற்றி எரிந்துள்ளது. எனது தம்பி மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடி உள்ளார். ஆனால் அவரது ஆடையில் தீப்பற்றி உடல் முழுவதும் எரிந்துள்ளது.

தீயில் எரிந்தபடி வழிநெடுக உதவி கேட்டு ஓடியுள்ளார். ஆனால் யாரும் உதவி செய்யவில்லை. ஆங்காங்கே நின்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். ஒரு நபர் மட்டும் தம்பியிடம் விசாரித்து எனது செல்போனில் தகவல் தெரிவித்தார்.

தம்பியின் உடலில் 85 சதவீத அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். யாராவது உதவி செய்து தீயை அணைத்திருந்தால் எனது தம்பி உயிர் பிழைத்திருப்பார். இவ்வாறு அகேராம் தெரிவித்தார்.

மெட்டியின் மூலம் அடையாளம்: ஜெய்ப்பூரை சேர்ந்த அனிதா (28), ராஜஸ்தான் காவல் துறையில் பெண் காவலராக பணியாற்றி வந்தார். இவர் செயின்புராவில் உள்ள காவல் நிலையத்தில் பணியில் சேருவதற்காக கடந்த 20-ம் தேதி சொகுசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது டேங்கர் லாரி விபத்தில் அவர் சென்ற சொகுசு பேருந்து சிக்கியது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அனிதாவின் கணவர், உறவினர்கள் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் செல்போன் அணைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக விபத்து நேரிட்ட பகுதிக்கு சென்று தேடினர். பின்னர் மருத்துவமனையில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெறுவோரில் அனிதா இருக்கிறாரா என்று தேடினர். இறுதியில் பிணவறைக்கு சென்றனர். அங்கு அடையாளம் காண முடியாத வகையில் ஓர் உடல் முழுவதுமாக எரிந்து இருந்தது. அந்த உடலின் காலில் இருந்த மெட்டியின் மூலம் உயிரிழந்தது அனிதா என்பதை கணவரும் உறவினர்களும் உறுதி செய்தனர். அனிதாவுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x