Published : 21 Dec 2024 07:12 PM
Last Updated : 21 Dec 2024 07:12 PM

குவைத்தில் பிரதமர் மோடிக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

குவைத்: பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத்தில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அரபு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்ட அப்துல்லா அல் பரூன், அப்துல் லத்தீப் அல் நெசெஃப் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று (டிச.21) குவைத் சென்றடைந்தார். விமான நிலையத்தில் குவைத் அரசின் உயர் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். மேலும், குவைத்தில் உள்ள இந்திய வம்சாவளியினரும் இந்திய தேசிய கொடியுடன் அதிக அளவில் கூடி பிரதமர் மோடியை வரவேற்றனர். அப்போது, குவைத்தில் உள்ள 101 வயதான முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியான மங்கள் சைன் ஹந்தாவையும் பிரதமர் மோடி சந்தித்தார்.

இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, "இந்தியாவுடனான அவர்களின் ஆற்றல், அன்பு மற்றும் அசைக்க முடியாத தொடர்பு ஆகியவை உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன. அவர்களின் உற்சாகத்திற்கும், நமது நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் பெருமிதம் கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அரபு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்ட அப்துல்லா அல் பரூன், அப்துல் லத்தீப் அல் நெசெஃப் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார். இது பற்றி, "ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் அரபு மொழி பெயர்ப்புகளைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அப்துல்லா அல்-பரூன் மற்றும் அப்துல் லத்தீப் அல்-நெசெஃப் ஆகியோர் இவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டதற்காக நான் பாராட்டுகிறேன். அவர்களின் முயற்சி உலகளவில் இந்திய கலாச்சாரத்தின் பிரபலத்தை எடுத்துக்காட்டுகிறது" என தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடிக்காக இந்திய வம்சாவளியினர் நடத்திய கலை நிகழ்ச்சிகளையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். இதன் தொடர்ச்சியாக குவைத்தில் வாழும் இந்திய தொழிலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இது குறித்து வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "பிரதமர் நரேந்திர மோடி, குவைத்தின் மினா அப்துல்லா பகுதியில் உள்ள தொழிலாளர் முகாமுக்குச் சென்று, இந்தியத் தொழிலாளர்களுடன் உரையாடி அவர்களின் நலம் குறித்து விசாரித்தார். இது வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தொழிலாளர்களின் நலனுக்கான முக்கியத்துவத்தைக் குறிக்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x