Last Updated : 21 Dec, 2024 02:09 AM

 

Published : 21 Dec 2024 02:09 AM
Last Updated : 21 Dec 2024 02:09 AM

பெங்களூருவில் த‌மிழ்ப் புத்தகத் திருவிழா தொடங்கியது: இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் தொடங்கி வைத்தார்

பெங்களூருவில் 3-வது தமிழ்ப் புத்தகத் திருவிழாவை இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் நேற்று தொடங்கி வைத்தார்.

பெங்களூரு: பெங்களூருவில் 3-வது தமிழ்ப் புத்தகத் திருவிழாவை இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் நேற்று தொடங்கி வைத்தார்.

கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக பெங்களூருவில் உள்ள சிவாஜிநகர் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 3-வது தமிழ்ப்புத்தகத் திருவிழாவை இஸ்ரோ முன்னாள் தலைவர் விஞ்ஞானி கே.சிவன் நேற்று தொடங்கி வைத்தார். இதன் தொடக்க விழாவில் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர்வி.ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ், தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வரும் டிசம்பர் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் மாலையில் புத்தக வெளியீடு, கருத்தரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட இலக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கன்னட எழுத்தாளர் எஸ்.ஜி.சித்தராமையா, பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், முன்னாள் திமுக எம்எல்ஏ கொ.வீ.நன்னன், எழுத்தாளர் என்.சொக்கன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

30-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்கும் இந்த கண்காட்சியில் பண்டிதர் பதிப்பக அரங்கில் (எண்.13) இந்து தமிழ் திசை பதிப்பகம் மற்றும் தி இந்து குழும நூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பாபாசாகேப் அம்பேத்கரின் பன்முக பார்வை, மாபெரும் தமிழ்க் கனவு, தெற்கிலிருந்து ஒரு சூரியன் உள்ளிட்ட அனைத்து நூல்களும் 10 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புத்தக திருவிழாவின் இறுதி நாளன்று கர்நாடகாவில் தமிழர்களின் நலனுக்காக பாடுபட்ட 20 பேருக்கு சிறந்த ஆளுமை விருது வழங்கப்படுகிறது.

கர்நாடகத் தமிழர்களின் உரிமை களுக்காக நீண்ட காலமாக குரல் கொடுத்து வரும் சமூக செயற்பாட்டாளர் சி.ராசனுக்கு இந்த ஆண்டின் கர்நாடகதமிழ்ப் பெருந்தகை விருது வழங்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x