Published : 20 Dec 2024 04:29 PM
Last Updated : 20 Dec 2024 04:29 PM

டெல்லி - நொய்டா பறக்கும் சாலையில் கட்டணம் வசூலிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டெல்லி - நொய்டா நேரடி பறக்கும் பாதையில் (டிஎன்டி) கட்டணம் வசூலிப்பதை நிறுத்துமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் 2016-ம் ஆண்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து தனியார் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலமாக இந்த பறக்கும் பாதையை பயன்படுத்தும் லட்சக்கணக்கானோர் பயனடைவர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு தனது தீர்ப்பில், "டெல்லி - நொய்டா நேரடி பறக்கும் பாதையில் பயணிக்கும் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க தனியார் நிறுவனமான நொய்டா டோல் பிரிட்ஜ் கம்பெனி லிமிட் (என்டிபிசிஎல்)-க்கு அனுமதி வழங்கிது நியாயமற்றது, நீதிக்கு புறம்பானது, தன்னிச்சையானது.

அந்த சாலையில் பயணிப்பவர்களிடம் கட்டணமோ, சுங்க கட்டணமோ தொடர்ந்து வசூலிப்பதற்கு காரணங்கள் ஏதுவும் இல்லை. அந்த ஒப்பந்தம் (சுங்க கட்டணம்) தவறானது என்று நாங்கள் கருதுகிறோம். எந்த முன் அனுபவமும் இல்லாத என்டிபிசிஎல் நிறுவனத்துக்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் உரிமையை நொய்டா நிர்வாகம் கொடுத்து அநீதிக்கு வழிவகுத்துள்ளது. இதன் மூலம் நொய்டா நிர்வாகம் தனது அதிகாரத்தை மீறியுள்ளது. மேலும், இது பொதுமக்கள் பல கோடி ரூபாய்களை இழக்க வழி வகுத்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டில் 9.2 கி.மீ., நீளம் கொண்ட டெல்லி - நொய்டா நேரடி பறக்கும் பாதையில் உள்ள எட்டுவழிச் சாலையை பயன்படுத்த இனி கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. நொய்டா குடியிருப்பாளர்கள் நலச்சங்கம் கடந்த 2012-ம் ஆண்டு, நொய்டா டோல் பிரிட்ஜ் நிறுவனம் சுங்க கட்டணம் என்ற பெயரில் பயணிகளிடமிருந்து கட்டணம் வசூல் செய்வதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவினை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் கட்டண வசூலை ரத்து செய்திருந்தது.

உயர் நீதிமன்றம் தனது உத்தரவில், "ஒப்பந்தம் பெற்றவர் (என்டிபிசி) திட்ட ஊக்குவிப்பாளர் மற்றும் டெவலப்பர் மற்றும் நொய்டா அதிகார சபை விதிகள் நிர்ணயித்த பயனர் கட்டணங்களை ஆதரிக்கவில்லை. சலுகை ஒப்பந்தப் படி, பயனர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்ட உரிமைகள் மூலம் அதிப்படியானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அது யுபி தொழில்துறை மேம்பாட்டு விதிகளுக்கு முரணாக உள்ளது" என்று தெரிவித்திருந்தது. இந்த தீர்ப்பினை எதிர்த்து என்டிபிசி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x