Published : 20 Dec 2024 12:02 PM
Last Updated : 20 Dec 2024 12:02 PM
புதுடெல்லி: அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் உள்ளேயும் இன்றும் அமளி நீடித்ததை அடுத்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 17-ம் தேதி பேசிய பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அவரை பிரதமர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் உள்ளேயும் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அம்பேத்கரின் புகைப்படத்தை கைகளில் ஏந்தியவாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்! பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்! அம்பேத்கர் புகழ் ஓங்குக! என கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், பாஜக எம்பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராடினர்.
இந்த போராட்டங்களைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். தேசிய கீதம் இசைக்கப்பட்டு அவை நடவடிக்கை தொடங்க இருந்த நிலையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமித் ஷாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். உடனடியாக, அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகக் கூறி சபாநாயகர் ஓம் பிர்லா அவையை ஒத்திவைத்தார்.
இதேபோல், மாநிலங்களவை கூடியதும் அங்கும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையை முதலில் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அறிவித்தார். மீண்டும் அவை கூடியதும் உறுப்பினர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். நாடாளுமன்றம் இயங்க அனுமதிக்க வேண்டும். மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நாட்டு மக்களின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறோம். இந்த தொடர்ச்சியான இடையூறுகள், நமது ஜனநாயக நிறுவனங்களின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீராக சிதைத்து வருகின்றன என குறிப்பிட்டார். எனினும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT