Published : 20 Dec 2024 10:58 AM
Last Updated : 20 Dec 2024 10:58 AM
புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்திருப்பது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு எதிரான அவரின் போராட்டத்தை திசை திருப்பும் பாஜகவின் தந்திரம் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு பதிவு என்பது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு எதிரான அவரின் போராட்டத்தில் இருந்து திசை திருப்பும் முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.
பாபாசாகேப்பின் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்காக வழக்குப்பதிவை சந்திப்பது பெருமைக்குரிய விஷயமே. எவ்வாறாயினும், பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் பழிவாங்கல் காரணமாக ராகுல் காந்தி ஏற்கெனவே 26 வழக்குகளை சந்தித்து வருகிறார். சமீபத்திய இந்த வழக்கும், சாதிவெறி ஆர்எஸ்எஸ் - பாஜக ஆட்சிக்கு எதிராக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் நிற்பதை தடுத்து நிறுத்த முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “அதேநேரத்தில், பாஜக தலைவர்கள் தங்களை உடல்ரீதியாக தாக்கியதாக காங்கிரஸ் பெண் எம்பிகள் பதிவுசெய்த வழக்கில் டெல்லி போலீஸார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே இதே கருத்தை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர், பாஜக தலைவர்களால் தாக்கப்பட்டதாக காங்கிரஸ் பெண் எம்.பி.களின் கொடுத்த வழக்குகளை டெல்லி போலீஸார் புறக்கணித்தது ஏன்? நீதியை ஒடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாஜக எம்.பி., ஹேமங்க் ஜோஷி கொடுத்த புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி மீது டெல்லி போலீஸார் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்தனர். நாடாளுமன்றத்தில் நடந்த போராட்டத்தின் போது ராகுல் காந்தி உடல் ரீதியிலான தாக்குதல் மற்றும் தூண்டுதலில் ஈடுபட்டதாக புகார்தாரர் குற்றம்சாட்டியிருந்தார்.
போலீஸாரின் ஆதாரங்களின் படி, ராகுல் காந்தி மீது பாரதீய நியாய சன்ஹிதா 115, 117, 125, 131, 351 மற்றும் 3(5) ஆகிய பிரவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT