Published : 20 Dec 2024 09:50 AM
Last Updated : 20 Dec 2024 09:50 AM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெட்ரோல் பங்க் அருகில் நின்றிருந்த ரசாயனம் ஏற்றிவந்த டேங்கர் வாகனத்தின் மீது லாரி ஒன்று மோதியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. 35-க்கும் அதிகமானேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் 30-க்கும் அதிகமான வாகனங்கள் தீயில் கருகி நாசமாகின.
விபத்து குறித்து போலீஸ் தரப்பில், “ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெட்ரோல் பங்க் ஒன்றின் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எல்பிஜி டேங்கர் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. டேங்கரில் ரசாயனம் இருந்ததால் அதன் மீது லாரி மோதிய வேகத்தில் தீ பிடித்தது. டேங்கர், லாரியில் பிடித்த தீ அருகில் இருந்த பெட்ரோல் பங்க்-க்கும் மளமளவெனப் பரவி பெரும் தீ விபத்தாக மாறியது.
இதில் 5 பேர் பலியாகினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில், பெட்ரோல் பங்க்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு வாகனங்களும் தீ பற்றி எரிந்து சேதமடைந்தன. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், 20 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடிக் கொண்டிருக்கையில் பெட்ரோல் பங்கில் இருந்து பெரிய அளவிலான தீப்பிழம்புகள் வெளியேறுவதைக் காண முடிந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் ஊடகப் பேட்டிகளில் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 25 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. விபத்தில் காயமடைந்த 35க்கும் அதிகமானோர், ஜெய்ப்பூரின் சவாய் மான் சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காயம்பட்டவர்களை நேரில் சந்தித்த முதல்வர்: இதனிடையே, ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாவும், சுகாதாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சாரும் சவாய் மான் சிங் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டனர். காயம்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் கிம்சார், தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டவர்களில் பாதி பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்தார்.
ஒருவர் எரிவதைப் பார்த்தேன்: இந்த விபத்து குறித்து நேரில் பார்த்தவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பே பற்றி ஏரியும் தீயைப் பார்த்ததாக தெரிவித்தனர். குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்ல வந்த வேன் டிரைவர் ஒருவர் கூறுகையில், நான் அந்த இடத்தினை அடைந்த போது மக்கள் கூச்சலிட்டப்படி அங்குமிங்கும் ஓடி உதவிக்காக அலைவதைக் கண்டேன். ஒரு மனிதன் தீயில் எரிவதைப் பார்த்தேன். அது ஒரு அச்சமூட்டும் காட்சியாக இருந்தது. தீயணைப்பு வீரர்களும், ஆம்புலன்ஸ்களும் விரைந்து வந்தாலும் அவர்களால் அந்த இடத்தை அவ்வளவு எளிதில் நெருங்க முடியவில்லை" என்றார்.
விபத்தை நேரில் பார்த்த மற்றொருவர் கூறுகையில், "அதிகாலை 5.30 மணிக்கு நாங்கள் எழுந்த போது பெரிய வெடிச்சத்தம் கேட்டது. பேருந்தில் இருந்து குதிக்க முடிந்தவர்கள் எல்லோரும் குதித்து தப்பித்தோம், முடியாதவர்கள் எரிந்து போனார்கள்" என்றார்
பேருந்து கண்ணாடி வழியாக குதித்து தப்பித்த ஒருவர் கூறுகையில்,"நானும் எனது நண்பனும் ராஜ்சமந்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தோம். அதிகாலை 5.30 மணிக்கு எங்களின் பேருந்து திடீரென நின்றது. நாங்கள் பெரிய வெடி சத்தத்தினைக் கேட்டோம். பேருந்தைச் சுற்றி எங்கும் தீயாக இருந்தது. பேருந்தின் கதவு பூட்டியிருந்ததால் நாங்கள் ஜன்னலை உடைத்துக்கொண்டு வெளியே குதித்தோம். எங்களுடன் 7 -8 பேர் ஜன்னல் வழியாக குதித்தனர். ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வெடிக்கும் சத்தத்தினைக் கேட்டோம். அருகில் ஒரு பெட்ரோல் பங்க் - இருந்தது." என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment