Published : 20 Dec 2024 01:31 AM
Last Updated : 20 Dec 2024 01:31 AM
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்றும் ஒத்திவைக்கப்பட்டன.
காலை 11 மணிக்கு மக்களவை கூடியபோது அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து, சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களை சமாதானப்படுதத முயன்றார். இதனிடையில், தமிழக முன்னாள் மக்களவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மறைந்த தலைவருக்கு சபையில் சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இரங்கல் குறிப்பு முடிந்ததும் எதிர்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக சபாநாயகர் ஓம் பிர்லா பிற்பகல் 2 மணி வரை சபையை ஒத்திவைத்தார். அதன்பிறகும், எதிர்க்கட்சிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியதையடுத்து மக்களவை சபாநாயகராக செயல்பட்ட திலிப் சகியா அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இதே நிலைதான் மாநிலங்களவையிலும் ஏற்பட்டது. நாடாளுமன்ற நுழைவுவாயிலின் படியில் பாஜக பெண் எம்.பி.க்களிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் கிரண் ரிஜிஜூ ஆகியோர் குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட கூச்சல் குழப்பங்களாலும் மாநிலங்களவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT