Published : 20 Dec 2024 01:16 AM
Last Updated : 20 Dec 2024 01:16 AM
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதை எக்ஸ் வலைதளத்தில் இருந்து நீக்க கோரி அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், சமூக ஊடக மற்றும் டிஜிட்டல் தள தலைவர் சுப்ரியா ஸ்ரீநடே கூறியுள்ளதாவது: மாநிலங்களவையில் அம்பேத்கரை அவமரியாதை செய்யும் வகையில் அமித்ஷா பேசியதை காங்கிரஸ் தலைவர்கள், கட்சியின் சமூக வலைதள நிர்வாகிகள் எக்ஸ் வலைதளத்தில் பகிரந்துள்ளனர். இந்த நிலையில், அமித் ஷா பேசிய பகிர்வை எக்ஸ் வலைதளத்திலிருந்து நீக்க கோரி மத்திய அரசிடம் இருந்து அழுத்தம் வந்துள்ளதாக அந்த நிறுவனம் எங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்துள்ளது.
ஆனால், பேச்சுரிமை சுதந்திரம் உள்ளதாக கூறி எக்ஸ் வலைதளம் மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது தவறில்லை என்று கருதினால் பிறகு ஏன் அவரது அமைச்சகம் அந்த பேச்சை எக்ஸ் வலைதளத்திலிருந்து நீக்குவதற்கு நெருக்கடி அளிக்க வேண்டும்.
இதிலிருந்து, அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசிய உண்மையான பேச்சை நாங்கள் பகிர்ந்துள்ளது உறுதியாகிறது. மேலும், அந்த பேச்சு திருத்தப்படவில்லை, சிதைக்கப்படவில்லை என்ற உண்மையும் வெளிவந்துள்ளது.
இதுதவிர, மாநிலங்களவை வலைதளத்திலும் அமித் ஷா பேசிய எடிட் செய்யப்படாத பேச்சுக்கள் 34 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. அதுவும் உங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஸ்ரீநடே தெரிவித்தார்.
இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டு குறித்து பாஜகவோ அல்லது எக்ஸ் வலைதளமோ அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT