Published : 19 Dec 2024 04:48 PM
Last Updated : 19 Dec 2024 04:48 PM
பெங்களூரு: டாக்டர் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்து ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் அமித் ஷா பேசிய போது, அம்பேத்கரின் பெயரை உச்சரித்ததற்குப் பதிலாக கடவுளின் பெயரை கூறி இருந்தாலாவது முக்தி கிடைத்திருக்கும் என்ற பேச்சுக்கு சிவகுமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பெலகவலியில் உள்ள சுவர்ண விதான் சவுதா அருகே செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக துணை முதல்வரிடம் அமித் ஷா பேச்சின் பின்னணி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த டி.கே. சிவகுமார், "அம்பேத்கரும், அரசியலமைப்பும் அன்றி யார் நமக்கு அடித்தளம் அமைத்து தந்திருக்க முடியும். அம்பேத்கர் நமக்கு அரசியலமைப்பைத் தந்தார். அவரை கவுரவிப்பது நமது கடமை." என்று தெரிவித்தார்.
மேலும் அம்பேத்கரும், அரசியலமைப்பும் அவமதிக்கப்பட்டது குறித்து ஆழமான விவாதம் நடத்த வேண்டும் என்றும் டி.கே. சிவக்குமார் வலியுறுத்தினார். கர்நாடக ஊரக மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரியங் கார்கேவும் அமித் ஷாவின் பேச்சினை கண்டித்துள்ளார். அவர் கூறுகையில், "அவரது பேச்சு மிகவும் தெளிவாக உள்ளது மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கடவுளின் பெயரை பல முறை உச்சரித்தால் நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள் என்பது உறுதி இல்லை. ஆனால், நீங்கள் அம்பேத்கரை நம்பினால் நீங்கள் நிச்சயம் சமூக நீதியினை பெறலாம். உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இதுபோன்ற பேச்சு அதீத ஆணவம் கொண்டது. அவர்கள் வந்த அமைப்புகளின் சித்தாந்தம் தான் அவர்களை இப்படி பேச வைக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT