Published : 19 Dec 2024 04:20 PM
Last Updated : 19 Dec 2024 04:20 PM
புதுடெல்லி: அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதற்காக தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் விடுத்துள்ள அறிக்கையில், “எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் தலைமையில், பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் கடந்த 15 நாட்களாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். எந்தவித இடையூறும் ஏற்பட்டதாக எந்தச் சம்பவமும் பதிவாகவில்லை.
சபைக்கு செல்லும் வழியில் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்று சபாநாயகர் தெளிவாக அறிவுறுத்தினார். நாங்கள் இதை எப்போதும் கடைப்பிடித்து வருகிறோம். ஒருபோதும் வழியைத் தடுக்கவில்லை. பாதுகாப்புப் பணியாளர்களுடன் அமைதியாக ஒத்துழைத்தோம்.
இன்று, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேர்னா ஸ்தாலில் நாங்கள் நடத்திய அமைதியான போராட்டத்திற்குப் பிறகு, அவைக்குள் செல்ல முயன்றோம். ஆனால், பாஜக எம்பிக்கள் சுவரொட்டிகளைக் கொண்டு நுழைவாயிலைத் தடுத்துக்கொண்டிருந்தனர். இதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். சபாநாயகரின் அறிவுறுத்தல்கள் முற்றாக மீறப்பட்டது. அங்கு பாதுகாவலர்களும் யாரும் இருக்கவில்லை.
பாஜக எம்.பி.க்கள் காங்கிரஸ் தலைவர் கார்கேவை தள்ளினார்கள். இது ஒரு வெட்கக்கேடான சம்பவம். அதே நேரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சபைக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி கூச்சலிட்டனர். சபையின் சூழலைக் கெடுக்கவும், நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் குலைக்கவும் பாஜக எம்.பி.க்கள்தான் காரணம் என்பது தெளிவாகிறது. பாபா சாகேப் அம்பேத்கருக்கு எதிராக அமித் ஷா கூறிய இழிவான கருத்துக்களுக்கு அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும். இதுபோன்ற எந்த ஒரு நாடகம் அல்லது சூழ்ச்சியும் பொறுப்பிலிருந்து காப்பாற்ற முடியாது.
உள்துறை அமைச்சர் தனது கருத்துக்காக ராஜினாமா செய்யும் வரை இந்த பிரச்சனையை நாடு முழுவதும் வீதிக்கு கொண்டு செல்வோம். பாபாசாகேப் அம்பேத்கருக்கு ஆதரவாக நிற்பதால் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் என்றால், ஒவ்வொரு வழக்கையும் மகிழ்ச்சியுடன் சந்திப்போம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...