Published : 19 Dec 2024 01:43 PM
Last Updated : 19 Dec 2024 01:43 PM

‘பாஜகவுக்கு அடிப்படை மரியாதை இல்லை’ - காங்., போராட்ட புகைப்படம் மாற்றம்; பிரியங்கா கண்டனம்

புதுடெல்லி: இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர் மீது அடிப்படை மரியாதை இல்லை என்று பாஜகவை காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி சாடியுள்ளார். அமித் ஷாவின் அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸின் போராட்டம் குறித்து பாஜக பகிர்ந்துள்ள படத்துக்காக அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாபாசாகேப் அம்பேத்கரை அமித் ஷா அவமதித்தார், அதனைத் தொடர்ந்து இன்று காலையில் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் அம்பேத்கர் புகைப்படத்தை அவமதித்துள்ளனர். இது அம்பேத்கரின் சிலையை உடைப்பதற்கு சமமான மனநிலையாகும். அவர்கள் அரசியலமைப்பை மாற்றப்போவதில்லை, இடஒதுக்கீட்டை ரத்து செய்யப்போவதில்லை என்று கூறுகிறார்கள். யார் அவரை நம்பப்போகிறார்கள்? அவர்களிடம் அடிப்படை மரியாதை இல்லை, பாபாசாகேப் அம்பேத்கர் நாட்டின் அரசியலமைப்பை உருவாக்கியவர். அவரைப்பற்றி நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்.” என்று தெரிவித்தார்.

முன்னதாக, அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சஞ்சய் சிங் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கரின் புகைப்படத்தை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அமித் ஷாவுக்கு எதிரான காங்கிரஸின் போராட்ட புகைப்படத்தில் அம்பேத்கரின் படத்துக்கு பதிலாக அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசின் புகைப்படத்தை வைத்து திருத்தி மாற்றியமைத்து பாஜக அதன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

கே.சி.வேணுகோபால் தாக்கு: காங்கிரஸ் கட்சியின் போராட்டம் குறித்து பாஜக அதன் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்துக்கு காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக மாற்றியமைத்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வெளியிட்டுள்ளப் பதிவில், “டாக்டர் அம்பேத்கரை அவமதிப்பதிலும் கேலி செய்வதிலும் பாரதிய ஜனதா கட்சி மிகவும் கேவலமானது. உள்துறை அமித் ஷாவின் அறிக்கையால் கோடிக்கணக்கான அம்பேத்கரின் ஆதாரவாளர்களின் மனக்காயத்தை ஆற்றும் வகையில் அவரை பதவி நீக்கம் செய்வதற்கு பதிலாக அம்பேத்கர் மீதான அவமதிப்பை இரட்டிப்பாக்குகிறது.

டாக்டர் அம்பேத்கர் அவமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு ஆதரவாக நிற்பது பாஜகவுக்கு நகைச்சுவையான விஷயமா? அம்பேத்கர் பாரம்பரியம் போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்களிலும் பாஜக அதன் அழுகிப்போன பொய்களைத் திணிக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு அம்பேத்கர் மீது மரியாதை இல்லை. அவர்களின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அம்பேத்கரின் அந்தஸ்தினை குறைக்க விரும்புகிறார்கள்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி பதவி விலகவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிவருகிறது. இதற்காக பாஜக தலைவர்கள் சாடி வருகின்றனர் இதனால் அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசிய விவகாரம் மாபெரும் அரசியல் சர்ச்சையாகியுள்ளது.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய அமித் ஷா, காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கும், அரசியல் சாசனத்துக்கும் எதிரான கட்சி என்று சாடியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x