Published : 19 Dec 2024 12:47 PM
Last Updated : 19 Dec 2024 12:47 PM

‘ராகுல் காந்தியால் காயமடைந்தேன்’ - பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி குற்றச்சாட்டு

காயமடைந்த பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி உடன் ராகுல் காந்தி

புதுடெல்லி: நாடாளுமன்ற வளாக படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. ராகுல் காந்தி ஒரு எம்பியை தள்ளினார் அந்த எம்பி என் மீது விழுந்ததால் நான் கீழே விழுந்து காயமடைந்தேன் என பிரதாப் சந்திர சாரங்கி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மற்றொரு புறம் காங்கிரசுக்கு எதிராக பாஜக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதாப் சந்திர சாரங்கி, “ராகுல் காந்தி ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தள்ளினார். அப்போது நான் படிக்கட்டுகளுக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். அந்த எம்பி என் மீது விழுந்ததால் நான் கீழே விழுந்துவிட்டேன்” என்று கூறினார்.

காயமடைந்த பிரதாப் சந்திர சாரங்கியை ராகுல் காந்தி பார்த்துவிட்டு பின் திரும்பிச் சென்றார். இந்த சம்பவம் குறித்துப் பேசிய ராகுல் காந்தி, “நான் நாடாளுமன்ற நுழைவு வாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றேன். ஆனால் பாஜக எம்.பி.க்கள் என்னைத் தடுத்து, என்னைத் தள்ளி, மிரட்ட முயன்றனர். இது நடந்தது. ஆம், இது நடந்தது. ஆனால் சலசலப்பால் நாங்கள் பாதிக்கப்படுவதில்லை. நுழைவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு. பாஜக எம்.பி.க்கள் எங்களை உள்ளே செல்லவிடாமல் தடுக்க முயன்றனர். பாஜக அரசியல் சாசனத்தைத் தாக்கி அம்பேத்கரின் புகழை அவமதிக்கிறது என்பதே மையப் பிரச்சினையாக உள்ளது.” என்று கூறினார்.

பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்து காயம் பட்டது குறித்துப் பேசிய பாஜக எம்பி கிரிராஜ் சிங், “ராகுல் காந்தி சபையில் அராஜகத்தை பரப்ப விரும்புகிறார். எம்.பி. பிரதாப் சாரங்கிக்கு நடந்த சம்பவம் கண்டனத்திற்குரியது. அவர் தள்ளப்பட்டார். இதனால் கீழே மயங்கி விழுந்தார். இது போக்கிரித்தனம் இல்லையா?.” எனக் குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x