Published : 19 Dec 2024 09:46 AM
Last Updated : 19 Dec 2024 09:46 AM
புதுடெல்லி: அமித் ஷாவின் பேச்சு பாஜகவின் பழைய மனப்பான்மையின் வெளிப்பாடு என அம்பேத்கரின் பேரன் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பாஜக மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் பேச வேண்டும்” எனப் பேசியிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், “பாஜக ஒரு கட்சியாக உருவாகும் முன்னர் அதன் முன்னோடிகளான ஜன சங்கம், ஆர்எஸ்எஸ் ஆகியன அம்பேத்கரை கடுமையாக எதிர்த்தன. அதனால் இப்போது அமித்ஷாவின் எதிர்ப்பு ஏதும் புதிதில்லை. அவர்களால் தங்களுடைய பழைய திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. அதற்குக் காரணம் காங்கிரஸ் அல்ல அம்பேத்கரால் அவர்களால் அந்தத் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. ஆதலால் அவர்கள் தொடர்ந்து இவ்வாறு கசப்பை வெளிப்படுத்துவார்கள். இது அவர்களின் பழைய மனப்பான்மையின் வெளிப்பாடு” என்று கூறியுள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு: இதேபோல் பிரகாஷ் அம்பேதகர் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸுக்கு இந்த மசோதாவை எதிர்க்க இன்னும் 5, 6 நாட்கள் தான் இருக்கின்றன. இதில் ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால் அரசியல் கட்சிகளின் முடிவுக்கு அது வழிவகுக்கும்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
அம்பேத்கர் குறித்த மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. மேலும், அம்பேத்கரை மத்திய அமைச்சர் அமித் ஷா அவமதித்துவிட்டதாக கூறி, நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் அம்பேத்கரின் புகைப்படத்தை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.
மேலும், மக்களவையில், “ஜெய் பீம், ஜெய் பீம்” என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் முழக்கமிட்டனர். மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது அவையில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தேசியத் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, அம்பேத்கரின் புகைப்படத்தை எடுத்து உயர்த்திக் காட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT