Published : 19 Dec 2024 03:13 AM
Last Updated : 19 Dec 2024 03:13 AM

மும்பையில் சுற்றுலா படகு மீது கடற்படை படகு மோதி 13 பயணிகள் பரிதாப உயிரிழப்பு: 101 பேர் பத்திரமாக மீட்பு

மும்பை: ​மும்பை கடற்கரை பகுதி​யில் சுற்றுலா படகு மீது, கடற்​படை​யின் அதிவேக ரோந்து படகு ஒன்று மோதி​ய​தில் 13 பேர் உயிரிழந்​தனர். 101 பேர் மீட்​கப்​பட்​டுள்​ளனர். அங்கு தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மும்பை அருகே​யுள்ள எலிபென்டா தீவில் புகழ்​பெற்ற கர்பரி குகைகள் உள்ளன. இதை பார்​வையிட சுற்றுலாப் பயணிகள் மும்பை கடற்​கரையி​லிருந்து படகு​களில் செல்வது வழக்​கம். சுற்றுலா பயணிகள் 100-க்​கும் மேற்​பட்​டோருடன், நீல்​கமல் என்ற படகு மும்​பை​யின் கேட்வே ஆப் இந்தியா பகுதியி​லிருந்து எலிபென்டா தீவு நோக்கி நேற்று மாலை புறப்​பட்​டது. அப்போது அந்த வழியாக கடற்​படை​யின் ரோந்து படகு சென்​றது. அந்த படகு நேற்று மாலை 3.55 மணியள​வில், கட்டுப்​பாட்டை இழந்து பயணிகள் படகு மீது அதிவேகத்​தில் மோதி​யது. இதில் பயணிகள் படகு பலத்த சேதம் அடைந்து, ஒரு பக்கமாக சாய்ந்​தது. இதனால் படகில் இருந்த பயணிகள் சிலர் கடலில் விழுந்​தனர்.

இத்தகவல் அறிந்​ததும் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் படகு​களில் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்​டனர். கடலில் விழுந்த 13 பேர் சடலங்​களாக மீட்​கப்​பட்​டனர். படகில் சென்ற பயணிகள் 101 பேர் மீட்​கப்​பட்டு கரைக்கு கொண்டு வரப்​பட்​டனர். காயம் அடைந்​தவர்​கள், உடல்​நிலை பாதிக்​கப்​பட்​ட​வர்கள் மருத்​துவமனை கொண்டுசெல்​லப்​பட்​டனர்.

மீட்பு பணி குறித்து இந்திய கடலோ காவல் படை ஐஜி பிஷம் சர்மா கூறுகை​யில், “மும்பை கடல் பகுதி​யில் கடலோர காவல் படை மற்றும் கடற்படை இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்​டுள்ளன. எங்களது கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்​டுள்ளன” என்றார். இந்த விபத்து குறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னா​விஸ் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்ள தகவலில், “எலிபென்டா தீவுக்கு சுற்றுலா பயணி​களுடன் சென்ற நீல்​கமல் என்ற படகு மீது கடற்​படை​யின் அதிவேக ரோந்து படகு மோதி விபத்​துக்​குள்​ளாகி​யுள்​ளது. இதில் 13 பேர் உயிரிழந்​துள்ளனர். 101 பேர் மீட்​கப்​பட்​டுள்​ளனர்.

மீட்பு பணியில் கடற்படை மற்றும் கடலோ காவல் படையினர் ஈடுபட்​டுள்​ளனர். மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவி​களை​யும் மாவட்ட நிர்​வாகம் வழங்க உத்தர​விடப்​பட்​டுள்​ளது” என்றார். மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணைய தலைவர் உன்மேஷ் வக் அளித்த பேட்டியில், ‘‘எங்கள் துறைமுகத்துக்கு சொந்தமான பைலட் படகு விபத்து நடந்த இடத்தை நேற்று மாலை கடந்து சென்றது. அந்த படகு மூலம் 40 பேர் மீட்கப்பட்டு துறைமுக ஆணைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x