Published : 19 Dec 2024 02:34 AM
Last Updated : 19 Dec 2024 02:34 AM
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை, சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது வீர சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்கும் கோரிக்கையை வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
மகாராஷ்டிர தேர்தலில் சிவசேனா (உத்தவ் உத்தவ் அணி) தோல்வியடைந்ததற்கு இந்துத்துவா கொள்கைகளை கைவிட்டதே முக்கிய காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் சிவசேனா நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். சட்டப்பேரவை தேர்தலுக்குப்பின், முதல்வர் பட்னாவிஸை, உத்தவ் தாக்கரே சந்திப்பது இதுவே முதல் முறை. அப்போது வீர சாவர்க்கருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்குவதற்கு ஏற்கெனவே விடுத்த கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்துமாறு உத்தவ் தாக்கரே கோரிக்கை மனு அளித்தார். அப்போது ஆதித்ய தாக்கரே உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர். அதன்பின் முதல்வர் பட்னாவிஸும், உத்தவ் தாக்கரேவும் சுமார் 15 நிமிடம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
சபாநாயகர் ராகுல் நர்வேகரையும் உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார். 20 எம்எல்ஏ.க்களுடன் மிகப் பெரிய எதிர்க்கட்சியாக இருக்கும் சிவசேனா (உத்தவ் அணிக்கு) எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்குப்பின் நாக்பூரில் உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில் கூறியதாவது: இதற்குமுன் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இருந்தபோதே, சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்கும்படி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், இன்று வரை அவரது கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை. அதனால் சாவர்க்கர் பற்றி பேச பாஜக.வுக்கு உரிமை இல்லை. சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
பாஜகவு.,வும் காங்கிரஸ் கட்சியும் நேரு மற்றும் சாவர்க்கர் பற்றி விவாதம் செய்வதை தாண்டி, நாட்டின் வளர்ச்சி விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். நேருவும், சாவர்கரும் தங்கள் பங்களிப்பை நாட்டுக்கு அளித்த வரலாற்று தலைவர்கள். இன்று நமது தேவை வளர்ச்சி, விவசாயிகள் பிரச்சினையை தீர்ப்பது, கட்டமைப்பை மேம்படுத்தி வேலைவாய்ப்பின்மை பிரச்சினைக்கு தீர்வு காண்பது ஆகியவைதான்.
மகாராஷ்டிராவின் தற்போதைய அரசிடமிருந்து பண்பட்ட அரசியல் சூழலை நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்களால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. அவர்கள் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். மாநில நலனில் அக்கறை செலுத்தி இந்த அரசு அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.
காங்கிரஸ் மவுனம்: அரசியல் சாசனம் குறித்த சாவர்க்கரின் கருத்துக்களை மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சமீபத்தில் விமர்சித்தார். ஆங்கிலேயரிடம் சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்குவதை, மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். ஆனால் இது குறித்து காங்கிரஸ் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT