Published : 19 Dec 2024 02:01 AM
Last Updated : 19 Dec 2024 02:01 AM

முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு நடந்துகொள்வதால் இறக்குமதி அதிகரிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு நடந்துகொள்வதால் நாட்டில் இறக்குமதி அதிகரித்து வருகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றது முதல் நாட்டில் முதலாளிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்கிறது. இதனால் நாட்டின் உற்பத்தி குறைந்து, இறக்குமதி அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாட்டில் உற்பத்தித் துறை பலமிழக்கிறது. நாணயத்தின் மதிப்பு குறைதல், அதிக வர்த்தகப் பற்றாக்குறை, அதிக வட்டி விகிதங்கள், வீழ்ச்சி நுகர்வு, உயரும் பணவீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

கடந்த நவம்பரில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 37.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. நாட்டின் இறக்குமதி அதிகரிப்பால் ஏற்பட்ட பற்றாக்குறையாக இது உள்ளது. மேலும், நாட்டில் தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்வதால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 70 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஏற்றுமதி வளர்ச்சியில் மத்திய அரசு கவனம் செலுத்துவதில்லை. கடந்த ஆண்டில் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தங்கத்தின் இறக்குமதி இருந்தது. தற்போது அதை விட நான்கு மடங்கு அதிகமாக 14.9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. பெட்ரோலியத்துக்குப் பிறகு நாட்டில் அதிக அளவு இறக்குமதி செய்யப்படுவது தற்போது தங்கம்தான். நாட்டின் மொத்த இறக்குமதியில் தங்கத்தின் சதவீதம் 21-ஆக உள்ளது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இருப்பினும், நாட்டில் எண்ணெய் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி நிலையான வேகத்தில் வளர்ந்து வருகிறது என்று மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x