Published : 18 Dec 2024 06:59 PM
Last Updated : 18 Dec 2024 06:59 PM
புதுடெல்லி: "அம்பேத்கருக்கு எதிராக நான் ஒருபோதும் பேசியதில்லை. எனது கருத்தை காங்கிரஸ் கட்சி திரித்துவிட்டது" என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் மீது அவர் இவ்வாறு தாக்குதல் தொடுத்தார்.
மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து தான் தெரிவித்த கருத்துக்கள் பற்றி அமித் ஷா விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், "எனது கருத்துக்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி பொய் செய்திகளை பரப்புகிறது. அம்பேத்கருக்கு எதிராக என்னால் ஒரு போதும் பேச முடியாது.
நாடாளுமன்றத்தில் பேசிய கருத்துக்களை காங்கிரஸ் கட்சி திரித்து கூறிய விதம் கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு எதிரானது, இடஒதுக்கீட்டுக்கு எதிரானது, அரசியலமைப்புக்கு எதிரானது. காங்கிரஸ் அரசு அம்பேத்கருக்காக ஒரு போதும் மணிமண்டபம் கட்டியதில்லை. அம்பேத்கருடன் தொடர்புடைய பல இடங்களை கட்டியது பாஜக அரசுகள் தான். அவரது பாரம்பரியத்தை போற்றும் படி அரசியலமைப்பு தினத்தை அறிவித்தது மோடி அரசுதான்.
நாடாளுமன்றத்தில் பேசிய பாஜகவினர், நாங்கள் ஆட்சியில் இருந்த போதெல்லாம் எவ்வாறு அரசியலமைப்பு சட்டத்தினை பாதுகாத்தோம் என்பதனை பட்டியலிட்டனர். இது காங்கிரஸ் கட்சி, அம்பேத்கருக்கு எதிரானது, இடஒதுக்கீடு, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்பதைக் காட்டுகிறது. காங்கிரஸ் வீர் சாவர்கரை அவமதித்தது, அவசரநிலையை கொண்டுவந்ததன் மூலம் அரசியலமைப்பை அவமதித்தது" என்று தெரிவித்தார்.
முன்னதாக, அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் விவாதத்தின் போது மாநிலங்களவையில் உரையாற்றிய அமித் ஷா, "பி.ஆர். அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு "பேஷன்" ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசுகிறார்கள். கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்" என்று தெரிவித்திருந்தார்.
அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் மன்னிப்பு கோர வலியுறுத்தியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்றுஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்பட மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய அரசியலமைப்புச் சிற்பியை அமித் ஷா அவமதித்துவிட்டதாகவும் தனது பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மீது பிரதமர் மோடிக்கு மதிப்பு இருந்தால் அமித் ஷாவை பதவி நீக்க வேண்டும். அமைச்சரவையில் நீடிக்க அவருக்கு தகுதி இல்லை. அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டால் தான் மக்கள் அமைதியாக இருப்பார்கள். இல்லையென்றால் அவர்கள் போராட்டத்தில் குதிப்பார்கள். டாக்டர் அம்பேத்கருக்காக மக்கள் இன்னுயிரைத் தர தயாராக இருக்கிறார்கள்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT