Published : 18 Dec 2024 02:23 AM
Last Updated : 18 Dec 2024 02:23 AM
குளிர்காலத்தில் ஓய்வெடுப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள மாளிகைக்கு நேற்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று வந்தடைந்தார். அவரை தெலங்கானா ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் ஹைதராபாத் அருகே உள்ள செகந்திராபாத் மாவட்டம், பொல்லாரத்தில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் ஓய்வெடுப்பது குடியரசுத் தலைவர்களுக்கு வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு குளிர்காலத்தில் ஓய்வெடுப்பதற்காக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விமானம் மூலம் ஹைதராபாத் வந்தார்.
முன்னதாக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஆந்திர மாநிலம், விஜயவாடாவிலுள்ள கன்னாவரம் விமான நிலையம் வந்தடைந்தார். அவரை ஆந்திர மாநில ஆளுநர் அப்துல் நஜீர், முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உட்பட பல்வேறு அமைச்சர்கள் வரவேற்றனர். அதன் பின்னர் குடியரசு தலைவர், தனி விமானம் மூலம் ஹைதராபாத் ஹக்கீம் பேட்டையில் உள்ள விமானப்படை பயிற்சி தளத்துக்கு சென்றடைந்தார்.
பின்னர் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் அவர் செகந்திராபாத் பொல்லாரத்தில் அமைந்துள்ள குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்றார். அங்கு அவரை தெலங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா, முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் வரவேற்றனர். வரும் 21-ம் தேதி வரை இங்கேயே ஓய்வெடுக்க உள்ள குடியரசு தலைவர் முர்மு, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார்.
குடியரசு தலைவர் வருகையையொட்டி ஹைதராபாத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT