Published : 18 Dec 2024 01:57 AM
Last Updated : 18 Dec 2024 01:57 AM

ஹரியானாவில் 70 வயது தம்பதிக்கு விவாகரத்து: மனைவிக்கு ரூ.3 கோடி ஜீவனாம்சம்

ஹரியானாவில் 70 வயது தம்பதிக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உள்ளது. மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.3 கோடியை வழங்க கணவர் ஒப்புக் கொண்டார்.

ஹரியானா மாநிலம், கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். 70 வயதைக் கடந்த இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து கடந்த 2006-ம் ஆண்டு மே 8-ம் தேதி பிரிந்த இந்த தம்பதி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இதனிடையே, கர்னால் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி கணவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு 2013-ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது. பஞ்சாப் அன்ட் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு 11 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த நிலையில், கடந்த மாதம் மத்தியஸ்தம் மற்றும் சமரச மையத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு இறுதி முயற்சியாக சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இந்த தம்பதியர் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொள்ள சம்மதித்தனர். மனைவிக்கு ஒரு முறை ஜீவனாம்சமாக ரூ.3.07 கோடி வழங்க கணவர் ஒப்புக் கொண்டார். இதன் அடிப்படையில், உயர் நீதிமன்றம் இந்த தம்பதியின் திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதன்படி, தனக்கு சொந்தமான நிலத்தை ரூ.2.16 கோடிக்கு விற்று, அந்தத் தொகையை வரைவு காசோலையாகவும் பயிர் அறுவடை மூலம் கிடைத்த ரூ.50 லட்சத்தை ரொக்கமாகவும் ரூ.40 லடdசம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களையும் முன்னாள் மனைவிக்கு வழங்கினார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடந்த நவம்பர் 22-ம் தேதி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், ஒரு முறை ஜீவனாம்சத்தைத் தவிர கணவரின் சொத்தில் அவரது மரணத்துக்குப் பிறகும் மனைவியோ, பிள்ளைகளோ எந்த உரிமையும் கோர முடியாது என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x