Published : 18 Dec 2024 01:54 AM
Last Updated : 18 Dec 2024 01:54 AM
முதியவரைக் காக்க வைத்ததால் ஊழியர்களுக்கு நொய்டா ஆணைய தலைமைச் செயல் அதிகாரி நூதன தண்டனையை வழங்கிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நொய்டா மேம்பாட்டு ஆணைய (நொய்டா அத்தாரிட்டி) அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் ஏராளமான ஊழியர்கழ் பணியாற்றி வருகின்றனர். நொய்டா மேம்பாட்டு ஆணைய தலைமைச் செயல் அதிகாரியாக டாக்டர் எம்.லோகேஷ் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அண்மையில், நொய்டாவிலுள்ள ஓக்லா தொழில்துறை வளர்ச்சி ஆணைய அலுவலகத்துக்கு முதியவர் ஒருவர் வந்துள்ளார். அப்போது அவர் அங்கிருந்த கவுன்ட்டரில் நீண்ட நேரமாக வரிசையில் நின்றுள்ளார். அப்போது அந்த முதியவருக்கு உதவ ஆணைய ஊழியர்கள் யாருமே வரவில்லை.
கண்காணிப்பு கேமரா மூலம் அதைப் பார்த்த எம்.லோகேஷ், உடனடியாக ஒரு பெண் ஊழியரை அனுப்பி முதியவருக்கு தேவையானதை செய்து தருமாறு கூறியுள்ளார். மேலும்
20 நிமிடங்கள் கழிந்த பின்னர் மீண்டும் கேமராவில் பார்த்தபோது அந்த முதியவர், அதே கவுன்ட்டரில் நின்று கொண்டே இருந்துள்ளார். இதையடுத்து அலுவலக வளாகத்துக்கு வந்த தலைமைச் செயல் அதிகாரி லோகேஷ், உடனடியாக ஆணைய ஊழியர்கள் அனைவரையும் அந்த இடத்துக்கு வருமாறு உத்தரவிட்டார்.
முதியவருக்கு உதவுமாறு கூறியும் ஊழியர்கள் அந்தப் பணியைச் செய்யாததால் அவர் கோபமடைந்து அவர்களுக்கு நூதன தண்டனையை அளித்தார்.
சுமார் 20 நிமிடங்கள் இருந்த இடத்திலேயே ஊழியர்கள் நிற்க வேண்டும் என்ற தண்டனையை அவர் வழங்கினார். இதையடுத்து அந்த ஊழியர்கள் 20 நிமிடத்துக்கு அதே இடத்திலேயே நின்றனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இவ்வாறு தண்டனை அளிப்பதன் மூலம் அரசு ஊழியர்கள், தவறை உணர்ந்து எதிர்காலத்தில் ஒழுங்காகப் பணியாற்றுவார்கள் என்றும் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT