Published : 17 Dec 2024 06:27 PM
Last Updated : 17 Dec 2024 06:27 PM

போதைப் பொருட்களுக்கு எதிராக தேசிய செயல் திட்டம் உருவாக்கம்: மத்திய அரசு தகவல்

குறியீட்டுப் படம்

புதுடெல்லி: போதைப் பொருட்களுக்கு எதிராக தேசிய செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் பி எல்.வர்மா, "சிறுவர்கள் உட்பட அனைத்து குடிமக்களிடமும் மது மற்றும் போதைப் பழக்கத்தை தடுக்க சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை போதைப்பொருளுக்கு எதிரான தேசிய செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டைச் சமாளிக்க, இத்துறை தேசிய செயல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமாகும்.

'போதைக்கு அடிமையானவர்களுக்கான ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்களை (எல்.ஆர்.சி.ஏக்கள்) தொண்டு நிறுவனங்கள் நடத்துகின்றன. இளம் பருவத்தினரிடையே ஆரம்பகால போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கான சமூக அடிப்படையிலான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

போதைப் பொருள் இல்லா இந்தியா இயக்கம் (NMBA) 2020 ஆகஸ்ட்15 அன்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய 272 மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. இப்போது இது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நஷா முக்த் பாரத் அபியான் உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் பள்ளிகளில் கவனம் செலுத்துவதன் மூலம் போதைப்பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதுவரை, இந்த இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம், 4.42 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள், 2.71 கோடிக்கும் அதிகமான பெண்கள் உட்பட 13.57 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு போதைப் பொருள் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாழும் கலை, பிரம்மா குமாரிகள், துறவி நிரங்காரி மிஷன், இஸ்கான், ஸ்ரீ ராம் சந்திர மிஷன் மற்றும் அகில உலக காயத்ரி பரிவார் போன்ற ஆன்மீக அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இயக்கம் குறித்த அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளிலும் ஒரு எச்சரிக்கை பரப்பப்படுகிறது. குழந்தைகள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதைத் தடுக்க சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது: நவ்சேத்னா பயிற்சி பாடத் தொகுப்பு:மாணவர்கள் (6முதல் 11ஆம்வகுப்பு), ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் ஆசிரியர் பயிற்சி பாடத் தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வாழ்க்கைத் திறன்களைக் கற்பிக்கவும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் 46 சமுதாய அடிப்படையிலான ஒத்த வயதினர் தலைமையிலான தலையீட்டுத் திட்டங்களுக்கு (சிபிஎல்ஐ)நிதி உதவி அளிக்கப்படுகின்றன" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x