Published : 17 Dec 2024 04:37 PM
Last Updated : 17 Dec 2024 04:37 PM

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மூலம் ஜிடிபி 1.5% வரை உயர வாய்ப்பு: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

ராம்நாத் கோவிந்த் | கோப்புப் படம்

புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் நாட்டு மக்கள் அனைவரது வளர்ச்சிக்கும் ஏற்றது என்றும், இத்திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1% முதல் 1.5% வரை உயரும் என்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்நாத் கோவிந்த், “இந்த திட்டம் நாட்டு மக்கள் அனைவரின் முன்னேற்றத்துக்கும் ஏற்றது. மற்ற அம்சங்களிலும், இந்தத் திட்டத்தை பின்பற்றுவது தேசத்துக்கும் உதவும். இந்தத் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய உலகத் தரம் வாய்ந்த பொருளாதார நிபுணர்களைக் கொண்ட குழுவை உருவாக்கி, அக்குழுவின் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளோம். இது நடைமுறைக்கு வரும்போது, ​​நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் தானாகவே 1% முதல் 1.5% அதிகரிக்கும்” என தெரிவித்தார்.

முன்னதாக, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 191 நாட்கள் ஆய்வு செய்து, 18,626 பக்கங்களைக் கொண்ட தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் செப்டம்பர் 2, 2023 அன்று சமர்ப்பித்தது. இந்த திட்டத்தால் ஏற்படும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து விவரித்த ராம்நாத் கோவிந்த், “இதன்மூலம் நமது பொருளாதாரம் 10% முதல் 11% வரை உயரும். இதன் காரணமாக, நமது நாடு உலகின் முதல் 3 அல்லது 4-வது பெரிய பொருளாதாரமாக திகழும்” என்று தெரிவித்தார்.

மக்களவையில் மசோதா தாக்கல்: ‘ஒரே நாடு. ஒரே தேர்தல்’ மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் சாசனத்தில் 129-வது திருத்தத்தை மேற்கொள்வதற்கான முன்மொழிவை இந்த மசோதா முன்வைத்துள்ளது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் இன்று பிற்பகல் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, ஆரம்ப சுற்று விவாதம் நடத்தப்பட்டது. அப்போது, இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மசோதாவை எதிர்த்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, “ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாட்டின் மீது தாக்குதல் நடத்துகிறது. இந்த மசோதாவை பரிசீலிப்பது இந்த அவையின் சட்ட திறனுக்கு அப்பாற்பட்டது. அதைத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்” என்று கூறினார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி, “ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை பாதிக்கிறது. சட்டப்பிரிவு 82 மற்றும் துணைப்பிரிவு 5 அனைத்து அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்துக்கு வழங்குகிறது. உலகம் அழியும் வரை ஒரே கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது” என கூறி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். சிவசேனா (யுபிடி) எம்.பி. அனில் தேசாய் உள்ளிட்டோரும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அரசியல் சாசன திருத்தம் கோரும் இந்த மசோதாவுக்கு மக்களவையில் ஆதரவு இருக்கிறதா என்பதை அறிய வாக்கெடுப்பு நடத்துமாறு எதிர்க்கட்சிகள் சபாநாயகரை கேட்டுக் கொண்டன. இதனை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்று, வாக்கெடுப்பு நடத்தினார். இதில், மசோதாவுக்கு ஆதரவாக 269 உறுப்பினர்களும், எதிராக 198 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

டிஆர் பாலு கோரிக்கையும், அமித் ஷா உறுதியும்: இந்த மசோதா மீது உரையாற்றிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு, “மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்” என வலியுறுத்தினார். மசோதாவை கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப மத்திய அரசு தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். “பிரதமரும் இதை விரும்பியதால் அதை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு (ஜேபிசி) நாம் அனுப்பலாம். இந்த மசோதாவை ஜேபிசிக்கு அனுப்ப வேண்டும் என்று திமுகவின் டி.ஆர்.பாலு கூறினார். இதை ஜே.பி.சி.க்கு அனுப்ப நாங்கள் தயாராக உள்ளோம் என்று பிரதமரே கூறியிருக்கிறார்” என்று மக்களவையில் அமித் ஷா கூறினார்.

இதையடுத்து, இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்குழு 90 நாட்களில் மசோதா குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும். தேவைப்பட்டால் காலக்கெடு நீட்டிக்கப்படும். கூட்டுக்குழுவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால், அங்கு இந்த மசோதா ஏற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த மசோதா மீது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்புக்கு விடப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x