Published : 17 Dec 2024 11:54 AM
Last Updated : 17 Dec 2024 11:54 AM

வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்களை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு இட ஒதுக்கீடு சம்பந்தமான மாணவர்கள் போராட்டம் கலவரமாக உருவெடுத்தது. பிறகு அந்தப் போராட்டம் அங்குள்ள சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதலாக வடிவெடுத்தது. இந்துக்களின் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. இந்துக்கள் பொதுவெளியில் தாக்கப்பட்டனர்.

கலவர நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிறகும் கூட வங்கதேசத்தில் இந்துக்கள் மீது மதரீதியான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வன்முறையாளர்களை அடையாளம் காண வேண்டும் என குரல் கொடுத்து அமைதி வழியில் போராட்டம் நடத்திய இஸ்கான் அமைப்பின் துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ், வங்கதேச காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத படி தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர் போராட்டத்தை மதக் கலவரமாக மாற்றி சிறுபான்மை இந்துக்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதால், அங்குள்ள இந்துக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்களை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்ட சுமார் 50 எம்பிக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் இவ்விஷயத்தில் இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வங்கதேச இந்துக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வருகின்றன. ஆனால் மோடி அரசு இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காக்கிறது. வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை பாதுகாக்கக் கோரி காங்கிரஸ் எம்பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச விவகாரம் தொடர்பாக நேற்று மக்களவையில் பேசிய பிரியங்கா காந்தி வத்ரா, “வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களுக்கு எதிராக இந்திய அரசு குரல் எழுப்ப வேண்டும். நமது அரசு வங்கதேச அரசுடன் பேசி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்.” என வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x