Published : 17 Dec 2024 02:16 AM
Last Updated : 17 Dec 2024 02:16 AM
இறந்துபோன தந்தையின் அரசுப் பணியை பெறுவதற்காக உடன்பிறந்த 2 சகோதரர்களை பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், நகிரேக்கல் பகுதியை சேர்ந்தவர் போலராஜு. மாநில வருவாய்த் துறையில் பணியாற்றி வந்த இவர், உடல்நலக்குறைவு காரணமாக சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார்.
இதையடுத்து கருணை அடிப்படையில் வாரிசு ஒருவருக்கு வழங்கப்படும் அரசுப் பணியை பெறுவதற்கு அவரது 2 மகன்கள் கோபி, ராமகிருஷ்ணா மற்றும் மகள் கிருஷ்ணவேணி இடையே போட்டி ஏற்பட்டது.
மூத்த மகன் கோபி போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தாலும், தந்தையின் அரசுப் பணி தனக்கே வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கிருஷ்ணவேணியும் அவரது தம்பி ராமகிருஷ்ணாவும் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வந்ததால் அவர்களும் தந்தையின் வேலைக்கு போட்டி போட்டினர்.
இந்நிலையில் கடந்த வாரம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கோபி, ராமகிருஷ்ணா ஆகிய இருவரையும் கிருஷ்ணவேணி கொலை செய்தார். பிறகு அவர்களின் சடலத்தை காரில் ஏற்றிச் சென்று குண்டூர் கால்வாய் மற்றும் கோரண்ட்லா மேஜர் கால்வாயில் வீசினார்.
இதையடுத்து கால்வாயில் இருந்து சடலங்களை மீட்ட குண்டூர் போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அரசு வேலைக்காக அண்ணன், தம்பி இருவரையும் கிருஷ்ணவேணி கொலை செய்ததது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT