Published : 17 Dec 2024 02:05 AM
Last Updated : 17 Dec 2024 02:05 AM
எட்வினா மவுன்ட்பேட்டனுக்கு நேரு எழுதிய கடிதத்தை ஒப்படையுங்கள் என ராகுல் காந்திக்கு பிரதமரின் அருங்காட்சியகம் கடிதம் எழுதி உள்ளது.
டெல்லியில் உள்ள பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் உறுப்பினர் ரிஸ்வான் காத்ரி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த செப்டம்பர் மாதம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தோம். அதில், இந்த அருங்காட்சியகத்தில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டு 51 அட்டைப் பெட்டிகளில் எடுத்துச் சென்ற, நேரு எழுதிய கடிதங்கள் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என கோரி இருந்தோம். அல்லது அந்த ஆவணங்களை ஸ்கேன் செய்ய அனுமதிக்க வேண்டும் அல்லது அதன் நகல்களை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவராக இருந்த சோனியா காந்தி உத்தரவின் பேரில் எடுத்துச் செல்லப்பட்ட அந்த ஆவணங்களில், எட்வினா மவுன்ட்பேட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பத்மஜா நாயுடு, விஜயலட்சுமி பண்டிட், பண்டிட் கோவிந்த் பல்லப் பந்த் மற்றும் ஜெயபிரகாஷ் நாராயண் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் நேரு பரிமாறிக்கொண்ட கடிதங்களும் அடக்கம்.
இதுவரை அந்தக் கடிதங்கள் ஒப்படைக்கப்படவில்லை. எனவே, அந்தக் கடிதங்களை திரும்பப் பெறுவதில் உதவ வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி உள்ளோம். அந்த ஆவணங்களை நம் நாட்டு பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவும், அதன் வரலாற்றின் ஒரு முக்கிய அம்சமாகவும் கருதி ஒப்படைக்க வேண்டும் என்றும் நான் அவரை வலியுறுத்தியுள்ளேன்.
அந்த ஆவணங்களைப் பார்க்காமல், அவற்றை திருப்பி எடுத்துச் சென்றது ஏன் என்பதற்கான காரணத்தைக் கூற முடியாது. அதில் ஒருவேளை நேரு குடும்பம் பற்றிய தனிப்பட்ட கருத்துகள் இருந்திருக்கலாம். ஆனால், அந்த வரலாற்று ஆவணங்கள் கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, அந்த ஆவணங்களை பிரதமரின் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க ராகுல் உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு, கடந்த 1964-ம் ஆண்டு, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் நிறுவப்பட்டது. இந்திய சுதந்திர இயக்க வரலாறு தொடர்பான ஆவணங்களை பாதுகாப்பதுதான் இதன் நோக்கம். குறிப்பாக, நவீன இந்திய வரலாறு பற்றி கல்வியாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் தெரிந்து கொள்ள இது வகை செய்கிறது.
இதில் மகாத்மா காந்தி, நேரு, ராஜகோபாலாச்சாரி, ஜெயபிரகாஷ் நாராயண் உள்ளிட்டோரின் கடிதங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் இதன் பெயர் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என கடந்த ஆண்டு மாற்றப்பட்டது. இது நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைத்து பிரதமர்களும் வழங்கிய பங்களிப்பை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்ய வகை செய்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT