Published : 17 Dec 2024 01:55 AM
Last Updated : 17 Dec 2024 01:55 AM

தாஜ்மகாலை கட்டியவர்கள் கை வெட்டப்பட்டதா? - யோகியின் சர்ச்சை கருத்துக்கு மறுப்பு

தாஜ்மகாலை கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய கருத்துக்கு வரலாற்றாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மும்பையில் கடந்த சனிக்கிழமை உலக இந்துக்கள் பொருளாதார அமைப்பின் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், "பிரதமர் நரேந்திரமோடி, ராமர் கோயிலை கட்டிய கைவினைஞர்கள் மீது மலர்களை தூவி கவுரவப்படுத்தினார். ஆனால் ஆக்ராவில் தாஜ்மகாலை கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டன. அதுபோல், மிகவும் உயரிய வகை துணிகளை நெய்ந்தவர்களின் கைகளும் அக்கால ஆட்சியாளர்களால் துண்டிக்கப்பட்டன. இதனால் அந்த பாரம்பரியமிக்க துணி வகைகள் முற்றிலும் அழிந்துவிட்டன" என்றார்.

உ.பி. முதல்வரின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு வட இந்திய வரலாற்றாளர்கள் மற்றும் ஆக்ராவாசிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். முகலாயர் மீதான வரலாற்று ஆய்வுக்கு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் உலகப் புகழ் பெற்றது. இதன் வரலாற்று துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் அப்சல் கான், முகலாயர் கட்டிடக் கலையில் பல ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து 'இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் அவர் கூறும்போது, "தாஜ்மகாலை கட்டிய கலைஞர்கள் அடுத்து மேலும் பல கட்டிடங்களை டெல்லி, ஆக்ரா பகுதிகளில் கட்டினர். அவர்களது கைகள் வெட்டப்பட்டது உண்மையானால் இது எப்படி சாத்தியமாகும்? மாறாக, அந்த முக்கிய கைவினைஞர்களுக்கு தனது அரசவையில் மன்னர் ஷாஜஹான் பதவிகள் அளித்து மகிழ்ந்தார். தாஜ்மகாலை கட்டிய சுமார் 20,000 பேரில் இந்துக்களும் இடம்பெற்றிருந்தனர். முக்கிய கைவினைஞர்களின் பெயர்கள் தாஜ்மகாலின் கட்டிடங்களில் சித்திர எழுத்துகளால் (கேலியோகிராபி) எழுதப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். அதேபோல், உயரிய வகை நெசவாளர்களின் கைகள் வெட்டப்பட்டன என்பதும் தவறான கருத்து ஆகும்” என்றார்.

இதே பிரச்சினை குறித்து 'இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ஆக்ராவாசியும் மூத்த ஆங்கில பத்திரிகையாளருமான பிரிஜ் கண்டல்வால் கூறும்போது, "தாஜ்மகாலின் முக்கியத்துவத்தை உயர்த்துவதற்காக இங்குள்ள சில வழிகாட்டிகள் கைகள் துண்டிப்பு, கோயிலை இடித்து கட்டப்பட்டது போன்ற கதைகளை அவிழ்த்து விடுவது வழக்கமாக உள்ளது. இதுபோன்ற தகவல்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. தாஜ்மகால் பற்றி அதிகம் எழுதிய ஆக்ராவின் வரலாற்றாளர் ராம்நாத் தனது ஆய்வு நூல் எதிலும் இதை குறிப்பிடவில்லை" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x