Published : 16 Dec 2024 07:05 PM
Last Updated : 16 Dec 2024 07:05 PM

“சுதந்திரப் போராட்டம் பற்றி மோடிக்கு அதிகம் தெரியாது!” - மாநிலங்களவையில் கார்கே காட்டம்

புதுடெல்லி: “பிரதமர் மோடிக்கு நாட்டின் சுதந்திரப் போராட்டம் பற்றி அதிகம் தெரியாது. மக்களவையில் பேசிய அவர், அரசியல் சாசனத்தை உருவாக்கியதற்காக காங்கிரஸைப் பற்றி கிண்டல் செய்தார்” என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே காட்டமாக பேசினார்.

இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகால புகழ்பெற்ற பயணம் என்ற தலைப்பில் மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, "நாட்டுக்காக போராடாதவர்களுக்கு சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பின் முக்கியத்துவம் எப்படி தெரியும்? ஆனால், நாங்கள் பொய் சொல்வதாக பிரதமர் கூறுகிறார். ஆனால் நம்பர் ஒன் பொய்யர் பிரதமர்தான். ரூ.15 லட்சம் வரும் என்று சொன்னார். ஆனால், ஒன்றும் வரவில்லை. இவர்கள் நாட்டை தவறாக வழிநடத்துகிறார்கள். பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தை வலுப்படுத்த கடந்த 11 வருடங்களில் என்ன செய்தார்கள் என்பதை பிரதமர் கூறியிருக்க வேண்டும்.

ஜவஹர்லால் நேருவின் பெயரால் அனைவரையும் அவமதிக்கிறீர்கள். அவருடன் சர்தார் படேலும் இருந்தார், அம்பேத்கரும் இருந்தார். நேரு முதல்வர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். மோடி, தனது உரையில் உண்மைகளை திரித்து நேருவை அவதூறாகக் குறிப்பிட்டார். அதற்காக அவர் நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜக இடஒதுக்கீட்டுக்கு எதிரானது. அதனால்தான் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக நிற்கிறார்கள். மோடிக்கு நாட்டின் சுதந்திரப் போராட்டம் பற்றி அதிகம் தெரியாது. மக்களவையில் பேசிய அவர் (பிரதமர் மோடி) அரசியல் சாசனத்தை உருவாக்கியதற்காக காங்கிரஸைப் பற்றி கிண்டல் செய்தார்.

"அரசியலமைப்புச் சபையானது வெறும் சலசலப்பான கூட்டமாக இருந்திருந்தால், குழப்பத்தைத் தவிர வேறொன்றும் இருந்திருக்காது. சபைக்குள் காங்கிரஸ் கட்சி இருந்ததால் குழப்பம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பூஜ்ஜியமாக குறைந்துவிட்டன. அது, அதன் நடவடிக்கைகளில் ஒழுங்கு மற்றும் ஒழுக்க உணர்வைக் கொண்டு வந்தது" என்று பாபா சாஹேப் அம்பேத்கரே கூறினார். ஆரம்பத்திலிருந்தே நீங்கள் அவரை மதிக்கவில்லை.

அமித் ஷா பெரிய வாஷிங் மிஷின் வாங்கியுள்ளார். அதன் உள்ளே போனவர்கள் சுத்தமாக வெளியே வருகிறார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூரில் வன்முறையும் அமைதியின்மையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்துக்குச் செல்லவில்லை. அங்குள்ள நிலைமையை மதிப்பிடுவதற்கு பிரதமருக்கு நேரம் இல்லை. இத்தனைக்கும் பிரதமர் மோடி, நாட்டிற்குள்ளும் வெளியிலும் எல்லா இடங்களிலும் பயணம் செய்கிறார். ஆனால், மணிப்பூருக்குச் செல்ல அவருக்கு நேரமில்லை. மணிப்பூர் செல்ல அவர் தயாராக இல்லை. உங்களுக்கு இவ்வளவு பாதுகாப்பு இருந்தும், நீங்கள் (பிரதமர் மோடி) ஏன் செல்லவில்லை? நீங்கள் ஏன் இந்த பிரச்சினையை தீர்க்கவில்லை?" என்று கார்கே பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x