Published : 16 Dec 2024 06:02 PM
Last Updated : 16 Dec 2024 06:02 PM

மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு: இந்தியா - இலங்கை கூட்டறிக்கை

புதுடெல்லி: "மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமான முறையில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி - இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க ஆகியோர் ஒப்புக்கொண்டனர். ஆக்ரோஷமான நடத்தை அல்லது வன்முறையைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்" என்று இந்தியா - இலங்கை கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதற்கான நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவும் இலங்கையும் தங்கள் கூட்டாண்மையை விரிவுபடுத்துவதற்கான எதிர்கால நோக்கத்தை ஏற்றுக்கொண்டன. விரைவில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடிக்க முடிவு செய்துள்ளன. மின்சார இணைப்பு மற்றும் பெட்ரோலிய குழாய்களை நிறுவுவதன் மூலம் ஆற்றல் உறவுகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளன.

பரந்த அளவிலான பேச்சுவார்த்தையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியா - இலங்கை பொருளாதார கூட்டாண்மையை வலுப்படுத்த இரு தரப்பும் முடிவு செய்துள்ளன. டிஜிட்டல் மற்றும் எரிசக்தி இணைப்பு ஆகியவை ஒத்துழைப்பின் முக்கிய தூண்களாக இருக்கும். மின்சாரம் இணைப்பு மற்றும் பெட்ரோலிய குழாய்களை நிறுவுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இலங்கையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை இந்தியா வழங்கும்.

இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்தும் வகையில் ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு சேவை தொடங்கப்படும். எங்கள் பாதுகாப்பு நலன்கள் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொள்கிறோம். பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் முடிக்க முடிவு செய்துள்ளோம்.

மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இந்த விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் தொடர வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறோம். இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தின் விருப்பங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என்று இந்தியா நம்புகிறது.

இந்தியா இதுவரை இலங்கைக்கு 5 பில்லியன் டாலர் கடன் மற்றும் மானிய உதவிகளை வழங்கியுள்ளது. இலங்கையின் 25 மாவட்டங்களிலும் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு உள்ளது. இந்தியாவின் திட்டங்களின் தேர்வு எப்போதும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்பதை அடிப்படையாகக் கொண்டது" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க, "இலங்கை அதிபரான பிறகு, இது எனது முதல் வெளிநாட்டு பயணம். டெல்லிக்கு வர முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு வழங்கப்பட்ட அழைப்பிற்காகவும், நான் உட்பட ஒட்டுமொத்த தூதுக் குழுவிற்கும் அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காகவும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் மேம்பட வேண்டும்.

இரு நாடுகளுக்கும் தொல்லையாக மாறியுள்ள மீனவர் பிரச்சினைக்கு நீடித்த மற்றும் நிலையான தீர்வை காண விரும்புகிறோம். அந்த பகுதியில்(இலங்கையை ஒட்டிய இந்திய பகுதியில்) இழுவை படகுகள் மூலம் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. அந்தப் பகுதியில் உள்ள மீனவர்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏனெனில், அது இந்தத் தொழிலுக்கு அழிவை ஏற்படுத்தும்.

பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதில் இந்தியா மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. எனவே, இலங்கையும் அதே பாதையில் செல்கிறது. இவ்விஷயத்தில் ஆதரவளிப்பதாக பிரதமர் மோடி எனக்கு உறுதியளித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை நாங்கள் சந்தித்தோம். அந்த புதைகுழியில் இருந்து வெளிவர இந்தியா எங்களுக்கு பெரிதும் உதவியது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இலங்கை மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது என்பதை நான் அறிவேன்.

சமூக பாதுகாப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவை நம் நாட்டு மக்கள் எங்கள் இரு தரப்பையும் அதிகாரத்திற்குத் தேர்ந்தெடுத்ததற்கான அடிப்படைக் காரணங்கள். சமீபத்தில் முடிவடைந்த அதிபர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் இது போன்ற ஒரு வரலாற்று வெற்றியை நாங்கள் பெற்றதில்லை. இலங்கை மக்களால் வெளிப்படுத்தப்பட்ட செய்தி, இலங்கையில் ஒரு புதிய கலாச்சாரம் உருவாக வழிவகுத்தது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள், அனைத்து சமூகங்களையும், சமயங்களையும் சேர்ந்தவர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்" என தெரிவித்தார்.

இதையடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், "இரு தரப்பு மீனவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு, வாழ்வாதார பிரச்சனைகளை காரணியாகக் கொண்டு, மனிதாபிமான முறையில் இவற்றைத் தொடர்ந்து தீர்க்க வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆக்ரோஷமான நடத்தை அல்லது வன்முறையைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற 6வது கூட்டுச் செயற்குழுக் கூட்டத்தை அவர்கள் வரவேற்றனர்.

பேச்சுவார்த்தை மற்றும் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் மூலம் நீண்ட கால மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட முடியும் என்ற நம்பிக்கையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள சிறப்பான உறவைக் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தொடர்ந்து ஈடுபடுமாறு அதிகாரிகளுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x