Published : 16 Dec 2024 12:39 PM
Last Updated : 16 Dec 2024 12:39 PM

1971 பாக்., போரில் வெற்றியை ஈட்டித் தந்த வீரர்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை

டெல்லியில் நடைபெற்ற வெற்றி தின விழாவில் பங்கேற்ற குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்டோர்

புதுடெல்லி: 1971-ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட போரில் இந்தியா வெற்றி பெற்ற தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களின் துணிச்சலைப் போற்றி உள்ளனர்.

அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக இந்திய ராணுவம் போரிட்டு வெற்றி பெற்றது. 13 நாட்கள் நடைபெற்ற இந்த போரில், பாகிஸ்தான் ராணுவம், இந்திய ராணுவத்திடம் சரணடைந்தது. பாகிஸ்தான் படைத் தளபதி ஜெனரல் அமிர் அப்துல்லா கான் நியாசி, 93 ஆயிரம் படையினருடன் இந்தியாவிடம் சரணடைந்தார். இந்தியாவின் கிழக்கு கமாண்டோ பிரிவு தலைவர் ஜெ.எஸ். அரோரா முன்னிலையில் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான படையினருடன் சரணடைந்த நாடாக பாகிஸ்தான் குறிப்பிடப்படுகிறது.

இந்த வெற்றியை அடுத்து, கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாக தனி நாடாக உருவெடுத்தது. இந்த போரில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3,843 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். 9,851 பேர் காயமடைந்தனர். இந்திய ராணுவம் வெற்றி பெற்ற இந்த தினம் வெற்றி தினம் (விஜய் திவஸ்) என ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "1971 போரின்போது, ​​இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த நமது வீரம் மிக்க வீரர்களுக்கு இந்த வெற்றி தினத்தில் நான் மரியாதை செலுத்துகிறேன். தேசிய பெருமைக்கு ஆதாரமாக இருக்கும் நமது துணிச்சலான ராணுவத்தினரின் தியாகத்தை நன்றியுள்ள தேசமாக அதனை நினைவில் கொள்கிறது. இது ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “1971 இல் இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு பங்களித்த துணிச்சலான வீரர்களின் தைரியத்தையும் தியாகத்தையும் நாம் மதிக்கிறோம். அவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், அசைக்க முடியாத உறுதியும் நம் தேசத்தைப் பாதுகாத்து, நமக்குப் பெருமை சேர்த்தது. இந்த நாள் அவர்களின் அசாதாரண வீரம் மற்றும் அவர்களின் அசைக்க முடியாத உறுதிக்கு அஞ்சலி செலுத்துகிறது. அவர்களின் தியாகங்கள் என்றென்றும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும். அதோடு, நமது தேசத்தின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “வெற்றி தினம் கொண்டாடப்படும் இந்த சிறப்பான தருணத்தில், இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலுக்கும் தியாகத்துக்கும் தேசம் வணக்கம் செலுத்துகிறது. அவர்களின் அசைக்க முடியாத தைரியமும் தேசபக்தியும் நம் நாடு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தது. அவர்களின் தியாகத்தையும் சேவையையும் இந்தியா மறக்காது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x