Published : 16 Dec 2024 04:13 AM
Last Updated : 16 Dec 2024 04:13 AM
பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த ஐ.டி. ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில் அவரது மனைவி, மாமியார், மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிஹாரின் சமஸ்திபூர் மாவட்டம் பெனி பகுதியை சேர்ந்தவர் அதுல் சுபாஷ் மோடி (35). இவருக்கும் உத்தர பிரதேசத்தின் ஜவுன்பூர் பகுதியை சேர்ந்த நிகிதா சிங்கானியாவுக்கும் (30) கடந்த 2019 ஜூனில் திருமணம் நடந்தது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பொறியாளராக அதுல் பணியாற்றி வந்தார். திருமணத்துக்கு பிறகு புதுமண தம்பதியர் பெங்களூருவில் குடியேறினர். கடந்த 2020 பிப்ரவரி 20-ம் தேதி அவர்களுக்கு குழந்தை பிறந்தது.
ஓராண்டுக்கு பிறகு தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கணவரை பிரிந்த நிகிதா, உத்தர பிரதேசத்தின் ஜவுன்பூரில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கொலை முயற்சி, இயற்கைக்கு மாறான உடல் உறவு, ஜீவனாம்சம், விவாகரத்து என்பன உட்பட கணவருக்கு எதிராக 9 வழக்குகளை நிகிதா தொடர்ந்தார்.
ஜீவனாம்சம் வழக்கில் ஜவுன்பூர் குடும்ப நல நீதிபதி ரீட்டா கவுசிக் கடந்த ஜூலை 29-ம் தேதி தீர்ப்பளித்தார். குழந்தையின் பராமரிப்பு செலவுக்காக மாதம்தோறும் ரூ.40,000-ஐ நிகிதாவுக்கு அதுல் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன்பிறகு, மன உளைச்சலில் இருந்த அதுல், பெங்களூருவில் உள்ள வீட்டில் கடந்த 9-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, தற்கொலைக்கான காரணம் குறித்து 24 பக்க கடிதம் எழுதி வைத்ததுடன், 90 நிமிட வீடியோவையும் வெளியிட்டார்.
“என் மீதான வழக்குகளை வாபஸ் பெற நிகிதா ரூ.3 கோடி கேட்டார். எனது மகனை பார்க்க அனுமதிக்கவில்லை. மாமியார், மைத்துனரும் என்னை பல்வேறு வகைகளில் மிரட்டினர். வயதான எனது பெற்றோரையும் மிரட்டினர். வழக்கு விசாரணையை தள்ளிவைக்க ஜவுன்பூர் நீதிபதி என்னிடம் ரூ.5 லட்சம் கேட்டார்” என்று அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, அதுல் தற்கொலை தொடர்பாக பெங்களூரு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதை அறிந்து, நிகிதா குடும்பத்தினர் தலைமறைவாகினர். இந்நிலையில், ஹரியானாவின் குருகிராமில் பதுங்கி இருந்த நிகிதா கடந்த 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். நிகிதாவின் தாய் நிஷா, அண்ணன் அனுராக் ஆகிய இருவரும் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கைது செய்யப்பட்டனர்.
3 பேரும் பெங்களூரு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT